ARTICLE AD BOX
விளையாட்டு உலகில் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி . இதற்கு அடுத்த விழாவாகப் பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி . 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி, 2026ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில், 74 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில், 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கான ஏலத்தை இந்திய அரசு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். சமீப காலங்களில், இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புடன் (CGF) 2030 நூற்றாண்டு நிகழ்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இடங்களாக புதுடெல்லி மற்றும் அகமதாபாத் ஆகியவை கருதப்படுகின்றன.
முன்னதாக, விளையாட்டுத் துறையில் இந்தியாவை வலிமையாக்கும் நோக்கில், இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA), 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்தும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் (IOC) விருப்பக் கடிதத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முறையாகச் சமர்ப்பித்துள்ளது. ”2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை முக்கியமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது" என அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
2036 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதில் இந்தியாவின் ஆர்வத்தை பிரதமர் நரேந்திர மோடி பலமுறை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.