ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கோட்டை, கொடைக்கானல், பழனி, சிறுமலை, ஐவர் மலை, ஆத்தூர் காமராசர் அணை என பல சரித்திரப் புகழ் பெற்ற பல இடங்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த ஒரு புகழ் பெற்ற பல்கலைக்கழகம் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் உருவான வரலாற்றை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளுவோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது காந்தி கிராமம். சிறுமலையின் அடிவாரத்தில் இரயில் பாதையில் இருபக்கமும் பல கட்டடங்களுடன் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
மகாத்மா சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் 02 பிப்ரவரி 1946 அன்று பயணம் மேற்கொண்டிருந்தார். சின்னாளப்பட்டியில் திரு.லகுமையா என்ற வியாபாரி இருந்தார். இவர் ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரருமாவார். அம்பாத்துரையில் ரயிலை எப்படியாவது நிறுத்தி மகாத்மாவைச் சந்திக்க வேண்டும் என்று லகுமையாவும் காங்கிரஸ் தொண்டர்களும் முடிவு செய்தார்கள்.
மகாத்மா பயணித்துக் கொண்டிருந்த ரயிலானது அம்பாத்துரை நிலையத்தில் நிற்காது என்று ஸ்டேஷன் மாஸ்டர் தெரிவித்தார். எனவே ரயிலானது அம்பாத்துரையை நெருங்கும் போது ஸ்டேஷனில் இருந்த கைகாட்டியை கீழே இறக்கி ரயிலை நிறுத்தினார்கள். ரயில் நின்றதும் கதர்குல்லாவுடன் இருந்த தொண்டர்கள் “மகாத்மா காந்திக்கு ஜே” என்று முழங்கினார்கள். மகாத்மா அந்த மண்ணில் தன் காலடியை பதித்தார். தொண்டர்களுடன் சிறிது நேரம் உரையாடிச் சென்றார். இதன் நினைவாக இப்பகுதி 'காந்தி கிராமம்' என்றழைக்கப்பட்டது.
காந்திஜியின் காலடி பட்ட மண்ணில் ஒரு ஆசிரமம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் லகுமையாவின் மனதில் தோன்றியது. இதே சமயத்தில் டாக்டர்.சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்களும் வார்தாவில் உள்ளது போல சேவாகிராமம் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க தகுந்த இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். டாக்டர் சௌந்திரம் அவர்கள் திரு.டி.வி.சுந்தரம் அய்யங்காரின் புதல்வி. இவர் வார்தாவில் சேவாகிராமத்தில் மகாத்மாவிடம் சமூகக் கல்வி பயின்றவர். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் காந்தி சேவா கிராமம் அமைக்க முயற்சி செய்துகொண்டிருப்பதை ஒரு அன்பர் மூலமாக அறிந்த லகுமையா தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை சேவா கிராமம் அமைக்க அன்பளிப்பாக வழங்கச் சம்மதித்தார்.
பின்னர் கட்டடப்பணிகள் துவக்கப்பட்டன. 7 அக்டோபர் 1947 அன்று காந்தி கிராமம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பல சமூகப்பணிகள் தொடங்கப்பட்டன. ஆரம்பநிலை ஆதாரக்கல்விப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஆதாரக்கல்வி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் படித்துத் தேர்ச்சி அடைந்தவர்கள் ஒரு வருடம் கிராமத்தில் தங்கி கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளைச் செய்ய வேண்டும். இங்கு சர்வோதய முறையில் கூட்டுறவு வங்கியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து வளர்ச்சி அடைந்து 1956 ஆம் ஆண்டில் 250 ஏக்கர் பரப்பளவில் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் கிராமிய பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்டது. இங்கு காந்தி அருங்காட்சியகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. தனிப்பட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த பல்கலைக்கழகம் தற்போது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.