ARTICLE AD BOX
காட்டழகிய சிங்கர்:
காட்டழகிய சிங்கர் கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமான் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நரசிம்மர் எட்டு அடி உயரத்தில் கட்சி தருகிறார். பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது. சுவாதி நட்சத்திரம் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் அன்று பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் வழிபடுவோர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நேரத்தில் இவரை வழிபட்டால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் நிச்சயம் என்பது நம்பிக்கை. நினைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான பானக நைவேத்தியம் இங்கே சிறப்பு. வெல்லம், சுக்கு, ஏலக்காய் முதலியவற்றை பெருமாள் சந்நிதியில் நைவேத்தியத்துக்குக் கொடுத்தால், சந்நிதியில் அர்ச்சகர்கள் பெருமாளுக்காக எடுத்து வைத்த தீர்த்தத்தில் பானகம் கரைத்து அதை பெருமாளுக்கு நிவேதனம் செய்து தருகிறார்கள். அந்த பானக பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினால், பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மேட்டழகிய சிங்கர்:
ஸ்ரீரங்கத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கோவில் மேட்டழகிய சிங்கர் கோவில். தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட இந்த ஆலயம், தாயார் சந்நிதிக்கு அப்பால் உள்ள மதில் சுவரைத் தாண்டியவுடன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் சிறந்த அம்சம் முழுவதும் ஓவியங்கள் தான். அவை பெரும்பாலும் நாயக்கர்களால் வரையப்பட்டவை. கம்பராமாயண அரங்கத்தின்போது அதைக் கேட்டு மகிழ்ந்தவர் இவர். அதனால் தான் கம்பர், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் வதைப்படலத்தை கம்பராமாயணத்தில் சேர்த்தாகப் பெரியோர்கள் கூறுவர்.
ஆற்றழகிய சிங்கர்:
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் இந்தக் கோவில் உள்ளது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து, ஸ்ரீரங்கம், திருவானைக்கா நோக்கி வண்டிகளில் பயணம் செய்வோர், காவிரி புதுப்பாலத்தின் மேல் ஏறாமல் அதற்கு சற்று முன்பே, வலதுபுறமாக கீழிறங்கி திரும்பிச் செல்லும் தனி வழிபாதையில் 200 அடிகள் சென்றால் உடனடியாக இந்தக்கோவிலை அடையலாம்.
காவிரி நதியை ஒட்டி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கொண்டுள்ள ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாளை வேண்டினால், திருமணத் தடை விலகும் என்பது ஐதீகம். இக்கோவிலின் பின்புறக்கதவைத் திறந்து ஒரு ஐந்து படி இறங்கினால் போதும், பெருமகிழ்ச்சியுடன் பொங்கிப் பெருகிவரும் காவிரியில் நாம் இறங்கிப் புனித நீராடிட முடியும். சுவர்க்கத்தின் வாசல் போன்ற கோவிலின் பிரதான நுழைவாயிலுக்குள் செல்லும் நமக்கு இடதுபுறம் கருடனும், வலது புறம் ஹனுமனும் காட்சியளிக்கிறார்கள்.
இந்த மூன்று நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால், வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை.