காசா மீதான இஸ்ரேலின் ‘கொடிய’ தாக்குதலில் 413 பேர் பலி - அமெரிக்காவை சாடும் ஹமாஸ்

3 hours ago
ARTICLE AD BOX

Published : 18 Mar 2025 06:43 PM
Last Updated : 18 Mar 2025 06:43 PM

காசா மீதான இஸ்ரேலின் ‘கொடிய’ தாக்குதலில் 413 பேர் பலி - அமெரிக்காவை சாடும் ஹமாஸ்

இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பாதிக்கப்பட்டோர்
<?php // } ?>

காசா: காசா மீதான இஸ்ரேலின் 'கொடிய' வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் இந்தக் கொடிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா வழங்கிய வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்றும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஹமாஸ் சொல்வது என்ன? - "ஆக்கிரமிப்பாளருக்கு (இஸ்ரேல்) வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவை அமெரிக்கா அளித்துளளது. இதன் காரணமாகவே, காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளுக்கு அமெரிக்காவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்து, அதை துல்லியமாக செயல்படுத்தியதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்து, அதை துல்லியமாக செயல்படுத்தியது. ஆனால், இஸ்ரேல் போரை தொடங்கியதன் மூலம் அதன் வாக்குறுதியை மீறியுள்ளது. நிலைமையை மதிப்பிடுவதற்கும், ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மத்தியஸ்தர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஹமாஸ் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்றார்.

எகிப்து கண்டனம்: காசா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை எகிப்து கண்டித்துள்ளது. கத்தார் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து காசா போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஜனவரி 19 அன்று அமலுக்கு வந்த போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறிய செயல். இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் பிணைக் கைதிகளின் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக பிணையக் கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஆகியோரைச் சந்திக்க பிணையக் கைதிகளின் குடும்பங்கள் விரும்புகின்றன. எனவே, இந்தச் சந்திப்பை நிகழச் செய்ய வேண்டும். பிணைக் கைதிகள் எவ்வாறு பாதுகாக்கப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்கள் எவ்வாறு திரும்பக் கொண்டுவரப்படுவார்கள் என்பது குறித்தும் விளக்கம் பெற விரும்புகிறோம். பிணைக் கைதிகள் கொல்லப்படுவதையும் காணாமல் போவதையும் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்காவிட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கைகள் பல கட்டங்களாக, பல விதமாக கொடுக்கப்பட்ட நிலையில், பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் எந்த முன்னேற்றமும் காட்டாததைச் சுட்டிக் காட்டி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article