ARTICLE AD BOX
கவிஞர் நந்தலாலா காலமானார்.. காவிரிக்கரையின் மைந்தன் மரணம்.. முதல்வர் கண்ணீர் மல்க இரங்கல்!
சென்னை: கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நந்தலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் காலமானார்ய அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைவு: கவிஞர் நந்தலாலா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில், அவரது மறைவு செய்தி அறிந்து தமுஎகச சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

அதில், "த.மு.எ.க.ச-வின் மாநில துணைத் தலைவரும் கவிஞருமான நந்தலாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதி நிகழ்வுகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று த.மு.எ.க.ச மாநிலக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. இரங்கல்: மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், "நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொடிருக்கிறேன்.தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக,சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது. பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை,அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் இரங்கல்: நந்தலாலாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே முதல்வர் ஸ்டாலின், ர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
காவிரிக்கரையின் மைந்தன்: தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் எனக் கவிஞர் நந்தலாலாவின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர். காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா, தமது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீராக்காதலுக்கு, 'திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு' நூலே சான்றாகும்.
பேரன்பு: அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும், தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கவிஞர் நந்தலாலா. தலைவர் கலைஞர் குறித்து, "தாம் வாழ்ந்த காலம் முழுதும், மானமும் அறிவும்; துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்" என்று உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரந்த மனத்தோடும் அன்போடும் வாழ்த்திப் பேசியதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.