வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கல்வி துறையை கலைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க கல்வித்துறையை கலைப்பதற்கான ஆவணங்களில் அதிபர் கையெழுத்திட்டு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கல்வித்துறையை பொது பட்டியலில் இருந்து மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி கல்வித்துறை செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

கல்வித் துறை அமைச்சர் லிண்டா மெக்மோகனுக்கு இது தொடர்பாக உத்தரவுகளை அனுப்பி இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே கல்வித் துறையில் ஊழியர்களை குறைப்பது கல்வித் துறைக்கான நிதியை குறைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
டொனால் டிரம்ப் இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற போதே கல்வி துறையை கலைக்கும் பணிகளை மேற்கொண்டார். ஆனால் அந்நாட்டு நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. தற்போதும் கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அரசினால் இதனை மேற்கொள்ள முடியும்.
இந்த நிலையில் அமெரிக்காவில் மாநில ஆளுநர்கள் மற்றும் கல்வி ஆணையர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த கூட்டத்தில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்திட இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கல்வி துறையின் கீழ் 1 லட்சம் அரசு பள்ளிகளும் 34,000 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளின் 85 சதவீத செலவினங்களை மாநில அரசுகள் வழங்குகின்றன. கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கும், மாற்றுத்திறன் மாணவர்களுக்குமான நிதியை மத்திய கல்வித்துறை தான் கவனித்து வருகிறது. அதுமட்டுமின்றி கல்விக்கடன்களையும் வழங்குவதாக தெரிகிறது. மத்திய கல்வித்துறை மூலம் 1.6 ட்ரில்லியன் டாலர் கடன் தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மத்திய கல்வித்துறையை கலைத்து அனைத்து நிர்வாகத்தையும் அந்தந்த மாநில அரசுகளிடம் வழங்கும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறார் டிரம்ப். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கல்வித்துறையில் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்ததும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதி தான் என சொல்லப்படுகிறது.
கடந்த 1979 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் தான் மத்திய கல்வித்துறை உருவாக்கப்பட்டது. தற்போது அந்த துறையை நீக்க வேண்டும் என்றாலும் நாடாளுமன்றம் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். தேசிய அளவிலான கல்விக் கொள்கையை உருவாக்குவது, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மானியம் வழங்குவது உள்ளிட்டவற்றை இந்த துறை கவனித்து வருகிறது.
ஆனால் ஜனநாயக கட்சி தன் தாராளமயமாக்கல் கொள்கையை கல்வித்துறை வாயிலாக நாடு முழுவதும் திணிப்பதாக குடியரசு கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரசின் செலவினங்களை குறைக்கும் ஒரு பகுதியாக கல்வித்துறையை முழுவதுமாக மூடுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.