ARTICLE AD BOX
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாணைக்கு வந்த நிலையில், சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் `சாதிகள் இல்லையடி பாப்பா’ என பாடம் நடத்துவது பெரிய முரண் என நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.
பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்கள்கூட சாதிப் பெயர்களை தாங்கியிருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, சில அரசு பள்ளிகளிலும்கூட சாதிப் பெயர் இடம்பெற்றிருப்பக் கூறி, அதிருப்தி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, இதற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பாக அரசின் நிலைப்பாடு தெரிவிக்க மேலும் ஒருவார கால அவகாசம் வேண்டும் என்று அரசுதரப்பு வழக்குரைஞர் கே.கார்த்திக் ஜெகநாத் கோரினார்.
இதையும் படிக்க: 2 நாள்களுக்கு முன்புகூட சீமான்தரப்பில் பேச்சுவார்த்தை? : விஜயலட்சுமி
கால அவகாச கோரிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ``பள்ளிகளில் சாதிய பாகுபாடு இருப்பதைத் தவிர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. இருந்தபோதிலும் பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய பெயர்களை நீக்கும் விவகாரத்தில் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் அவகாசம் கோருவதுடன், தயக்கம் என்ன வேண்டியுள்ளது’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மேலும் அவகாசம் கோரக்கூடாது என்று கூறி, ஒருவார கால அவகாசம் அளித்தார்.