கண்ணீர் அழுத்த நோய் (Glaucoma) வருவதற்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

3 hours ago
ARTICLE AD BOX

கண்களால் பார்ப்பவற்றின் தகவல்களை மூளைக்கு அனுப்புவது பார்வை நரம்பு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பார்வை நரம்பை கண்ணீர் அழுத்த நோய் பாதிக்கும்.

கண்ணீர் அழுத்த நோய் என்றால் என்ன?

கண்களில் சுரக்கும் திரவம் கண்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும். இது கண்களின் ஓரத்தில் இருக்கும் சல்லடை போன்ற அமைப்பின் வழியாக வெளியேறி உடலுக்குள் செல்லும். இந்த சல்லடை போன்ற அமைப்பில் ஏற்படும் அடைப்பு காரணமாக திரவம் கண்களில் இருந்து வெளியேற முடியாமல் கண்களுக்குள்ளேயே தேங்கி நிற்கும். அதிகப்படியாக தேங்கி நிற்கும் திரவம் நாளடைவில் கண்களில் இருக்கும் பார்வை நரம்பினை பாதித்து பார்வை திறனையும் பாதிக்கும்.

உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவது போல் நம் கண்களிலும் உள்விழி அழுத்தம் (intraocular pressure) என்பது உள்ளது. இது அழுத்தம் அதிகமாகும் பொழுது கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் ஆப்டிக் நரம்பை பாதிக்கும். இதுதான் கிளாகோமா என்று சொல்லப்படுகிறது.

அறிகுறிகள்:

ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் எதுவும் நேரிடையாகத் தெரியாது. இந்த கண்ணீர் அழுத்த நோய் பாதிப்புக்கு உள்ளானால் கண்ணுக்கு நேராக உள்ளவை தெரியும். பக்கவாட்டில் உள்ளவை தெரியாது. இந்த அறிகுறியை கண்டு கொள்ளாமல் புறக்கணித்தால் கண் பார்வை பாதிக்கப்பட தொடங்கி ஒரு கட்டத்தில் பார்வை முழுவதுமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பார்க்கும் திறனில் ஏதேனும் குறைபாடு தெரிந்தால் காலம் தாழ்த்தாமல் கண் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

பார்வை நரம்பை சேதப்படுத்தும் இந்த கிளாகோமா முற்றிய நிலையில் கண்களில் கடுமையான வலியும், கண் சிவப்பாக இருப்பதும், கண்களில் இருந்து நீர் வடிவதும் ஏற்படும். அத்துடன் பார்வை மங்கலடையும்.

இவற்றின் அறிகுறிகளை புறக்கணித்தால் பாதிப்பு அதிகமாகி ஒரு கட்டத்தில் பார்வையே பறிபோகும் வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம்.

கண்ணீர் அழுத்த நோய்க்கான காரணங்கள்:

பரம்பரை காரணமாகவோ, கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்றவற்றின் காரணமாகவோ வரலாம். வயதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கண்களில் அடிபடுதல், சர்க்கரை நோய் போன்றவை கண்ணீர் அழுத்தம் ஏற்பட காரணமாகலாம்.

கட்டுக்குள் வைக்க:

கண் மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனையின் பேரில் கண்ணீர் அழுத்த நோய்க்கான சொட்டு மருந்தை பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பை கட்டுக்குள் வைக்க முடியும். கண் சொட்டு மருந்தை வாழ்நாள் முழுவதும் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப போட்டு வர கண்களில் உள்ள பிரஷர் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும். இதனால் பார்வை பறிபோவதை தடுக்க இயலும்.

இதையும் படியுங்கள்:
கண்ணாடி இல்லாமல் கண் பார்வை நன்றாக தெரியவேண்டுமா?
glaucoma

மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்களில் உள்ள பிரஷர் கட்டுக்குள் உள்ளதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

தீர்வுகள்:

40 வயதைக் கடந்த ஒவ்வொருவருமே ஆண்டுக்கு ஒரு முறை கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சையை பெற முடியும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பார்வையில் பிரச்சனைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. விழித்திரையை பாதிக்கும் டயபடிக் ரெட்டினோபதி என்ற விழித்திரை பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பார்வை நரம்பு முற்றிலும் பாதிக்கப்பட்டால் இழந்த பார்வையை மீண்டும் பெற இயலாது. எனவே ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து பார்வை இழப்பு ஏற்படுவதை தவிர்க்க தகுந்த கண் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதும், அவர் கூறும் வழிகாட்டுதலின்படி செயல்படுவதும் தான் பார்வை இழப்பை தடுக்க உதவும்.

கண் பிரஷர் குறைய சாப்பிட வேண்டியவை:

சத்தான உணவுகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கண்களுக்கு ஊட்டமளிக்கும். கண்களை பாதுகாக்க சத்தான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வது கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

காஃபின் கண் அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தியானம், யோகா, சுவாசப் பயிற்சிகள், இசை கேட்பது போன்றவை இயற்கையாகவே கண்ணழுத்தத்தை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
கண் பார்வை பற்றி இந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! 
glaucoma
Read Entire Article