புதுச்சேரி: சிறுமியை திருமணம் செய்தவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிறுமியின் தந்தை, அத்தை ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கயத்தார் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (31). இவர் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக உறவினர்களான தனலட்சுமி, லட்சுமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுமியை ஜானகிராமன் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து சிறுமி தரப்பில் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. அதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் ஜானகிராமன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜானகிராமனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.

மேலும், ஜானகிராமனின் பெற்றோர், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, அத்தை ஆகிய 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் புதுச்சேரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.

போக்சோ சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.