ARTICLE AD BOX
கடுவெளி சித்தர் அவதரித்து வாழ்ந்த காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு. கடுவெளி என்றால் 'வெட்ட வெளி' என்று பொருள். கடுவெளி சித்தர் என்பவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவர் காஞ்சியில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. இவரைப் பற்றிய வரலாற்றை யாரும் முறையாக அறியவில்லை.
லிங்கம் பிளந்த அதிசயம்:
சிவபெருமானை மனதில் எண்ணியபடி பொதுமக்களை நல்வழிப்படுத்த போதனைகளில் ஈடுபட்டிருந்த கடுவெளியார் வாரம் ஒருமுறை திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சன்னதி முன் அமர்ந்து சிவன் மீது மனம் உருகி பாடுவார். அவரது பாடல் வரிகளால் மகிழ்ச்சியுற்ற ஈசன் தாம் கடுவெளி சித்தர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட பரமானந்தர் ஆலய கருவறையில் உள்ள லிங்க ஆவுடையாரை இரண்டாக பிளந்து திருவிளையாடல் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இப்போதும் இந்த பிளவுபட்ட சிவலிங்கம் கடுவெளியில் காணப்படுகிறது. கடுவெளி சித்தரின் ஆழ்தியானமே கடுவெளி சிவனை மனமுருக்கி இரண்டாகப் பிளக்கச் செய்தது என்கிறார்கள்.
பரமானந்தர் மற்றும் வாலாம்பிகை:
திருத்துறைப்பூண்டி வட்டத்துள் இருக்கும் கடுவெளியில் தோன்றிய சித்தர் வெட்ட வெளியில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை ஜெபித்த பொழுது பரமானந்தத்தை காட்டியமையால் இத்தலத்து ஈசனின் பெயர் 'பரமானந்தர்'. சித்த புருஷர்கள் அனைவரும் சிவனோடு உறைகின்ற தேவியை சக்தி கொடுப்பதற்காக வணங்கி வந்தனர். ஆனால் கடுவெளி சித்தர் அம்பிகையை வாலைக்குமரியாகவே (வயதுக்கு வராத இளம்பெண்) வணங்கினார். இதனால் ஈசனுடன் உறையும் தேவிக்கு 'வாலாம்பிகை' என்ற திருநாமமும் ஏற்பட்டது.
நந்தவனத்திலோர் ஆண்டி:
உடல் நலமாக உள்ள பொழுதே ஆன்மா கடைத்தேறும் வழியை அறிய வேண்டும் என்று கூறிய சித்தர் இவர். தன் பாடல்களில் கடுவெளி பற்றி அதிகம் பேசியதால் இவர் 'கடுவெளி சித்தர்' என்று அழைக்கப்படுகிறார்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குழந்தையை வேண்டி' என்ற பாடல் கடுவெளி சித்தரால் பாடப்பட்டது. உலக வாழ்வின் நிலையாமையை அழகாகச் சொன்ன பாடல் இது. கடுவெளி சித்தர் பாடல், ஆனந்தக் களிப்பு, வாத வைத்தியம் மற்றும் பஞ்ச சாஸ்திரம் போன்றவை இவர் இயற்றிய நூல்கள்.
ஜீவசமாதி:
கடுவெளி சித்தருடைய ஜீவசமாதி பரமானந்தர் ஆலயத்திற்குள் அமைந்திருப்பதால் அவரது ஜீவசக்தியும், சிவன் சக்தியும் சேர்ந்திருக்க இந்த சித்தருடைய பூமியை நாடி வருபவர்கள் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களும் நீங்குவதாக கூறப்படுகிறது. கடுவெளியில் அவதரித்து அருகில் உள்ள ஆலத்தூரில் அடக்கமானதால் இரண்டு ஊர்களுக்குமே பொதுவான புனைப் பெயராக சித்தராலத்தூர் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது.
கடுவெளி அமைவிடம்:
திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் எடையூர் சங்கந்தி கடைத்தெரு இறங்கி மன்னார்குடி சாலையில் 3 கிலோ மீட்டர் சென்றால் கடுவெளியை அடையலாம்.
ஆலய சிறப்புகள்:
இங்கு ஏற்றப்படும் சிறிய அகல் விளக்கின் தீபம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது பெரிய தீபமாக தெரிவது கடுவெளியின் அற்புத காட்சியாகும்.
இவரை வழிபட, பித்ரு தோஷங்கள் நீங்கும். மோட்ச தீபத்தை இந்த ஆலயத்தைச் சுற்றி ஏற்ற, வாழ்வில் ஏற்படும் சோதனைகளும், துயரங்களும் நீங்க பெறலாம்.
பௌர்ணமி தோறும் இங்கு மிக சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சூரிய கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெற ஒரு மோட்ச தீபம் போதும் என்பது கடுவெளி பரமானந்தநாதரின் ஆலய சிறப்பாகும்.
கோவில் வளாகத்தில் வில்வம், மாவிலங்கண், நொச்சி, கிளுவை ஆகிய மரங்கள் தலவிருட்சங்களாக காட்சி தருவது தனி சிறப்பு. ஈசனுக்கு உகந்த கொன்றை, நாகலிங்கம், இலுப்பை மரங்களும் இங்கு காட்சி தருகின்றன.
சித்தர்கள் வழிபடும் வாலையே (வயதுக்கு வராத இளம்பெண்) இங்கு வாலாம்பிகையாக எழுந்தருளி இருப்பதாக சொல்லப்படுகிறது. வாலையின் ஆற்றலும் இந்த ஆலயத்தில் கூடுதல் இறை அதிர்வுகளை ஏற்படுத்துவதாக உள்ளது.