கஞ்சா கும்பலை பிடித்தபோது தப்பி ஓடியவரை விரட்டிய ஏட்டு மயங்கி விழுந்து சாவு

5 hours ago
ARTICLE AD BOX

விக்கிரவாண்டி: கஞ்சா கும்பலை பிடித்தபோது தப்பி ஓடியவரை விரட்டிய ஏட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் சீனிவாசன்(40). நேற்று அதிகாலை 6 மணி அளவில் விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏட்டு சீனிவாசன் மற்றும் முதல்நிலை காவலர் மஞ்சுநாதன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது ஆவுடையார்பட்டு கிராமத்தில் 3 நபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர். போலீசாரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடினர். இதில் இருவரை பிடித்ததில் ஒருவர் கஞ்சா பாக்கெட் வைத்திருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து தப்பி சென்றவரை பிடிக்க இருவரும் சென்றனர். தொரவி கிராம ஏரிக்கரையில் நின்றிருந்த அந்த நபரை ஏட்டு சீனிவாசன் மற்றும் காவலர் மஞ்சுநாதன் ஆகிய இருவரும் பிடிக்க ஓடியுள்ளனர். அப்போது ஏட்டு சீனிவாசன் திடீரென மயங்கி விழுந்தார். மஞ்சுநாதன் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். காவல்துறையில் மிக நேர்மையாக பணியாற்றியதற்காக சீனிவாசனுக்கு சில நாட்களுக்கு முன், விழுப்புரம் எஸ்பி சரவணன், பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இறந்த சீனிவாசனுக்கு மகேஸ்வரி (35) என்ற மனைவியும் கிரிஷ்னிகா(8) என்ற மகளும், கிருத்தி (6) என்ற மகனும் உள்ளனர்.

* ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்த சீனிவாசன் (40) என்பவர் நேற்று விடியற்காலை சக காவலர் மஞ்சுநாதன் என்பவருடன் தொரவி கிராமத்தில், விக்கிரவாண்டி – புதுச்சேரி மாநில நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியான நபரை விரட்டிப் பிடிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தலைமைக் காவலர் சீனிவாசன் அர்பணிப்புடன் கூடிய பணி எந்நாளும் நினைவு கூறத்தக்கது. அவரது உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறி உள்ளார்.

The post கஞ்சா கும்பலை பிடித்தபோது தப்பி ஓடியவரை விரட்டிய ஏட்டு மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Read Entire Article