ARTICLE AD BOX
குருவாயூர் கோயில் நிர்வாகத்தால் 'கஜராஜன்' (யானைகளின் ராஜா) என்ற பட்டம் வழங்கப் பெற்றதுடன், அந்த யானை இறந்த நாளில் ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடும் பெருமைக்குரிய யானை பற்றி உங்களுக்குத் தெரியுமா? கேரளாவிலுள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயில் யானையாக இருந்த, குருவாயூர் கேசவன் என்று அழைக்கப்பட்ட யானைக்குத்தான் மேற்காணும் இரண்டு பெருமைகளும் இருக்கின்றன.
மலபார் சச்சரவிலிருந்து தனது பொருள்கள் மீண்டும் கிடைத்ததற்கு காணிக்கையாக, நீலாம்பூர் நாட்டு ராஜவம்ச குடும்பத்தினர், 1916 ஆம் ஆண்டில் ‘கேசவன்’ என்ற பெயர் கொண்ட யானையைக் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர். இந்தக் கேசவன் யானை, அழகு இல்லாமலும், குறும்புத்தனம் கொண்டும், யானைப்பாகன் ஆணைக்குப் பணியாமலும் இருந்து வந்ததது. எனவே, அக்காலத்தில் அதனை, ‘பைத்தியம் பிடித்த யானை’ என்றேச் சொல்லி வந்தனர்.
அந்த நாளில், 41 நாட்கள் குருவாயூரப்பன் கையில் வெண்ணெய் வைத்து மந்திரம் சொல்லி மருந்தாக மேல்சாந்தி கொடுத்து, பஜனைக்காக மூன்று வேளை சீவேலிக்கும் கேசவன் யானையையேப் பயன்படுத்தினர். கோயில் மருந்தும் சேவையும் கேசவன் ஓர் இணையற்ற சிறந்த யானையாகப் பின்னால் வளர உதவியது.
பத்மநாபன் யானை புகழின் உச்சியில் இருந்த போதுதான் கேசவன் யானை குருவாயூர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பத்மநாபனின் நற்குணங்களை எல்லாம் கேசவன் பாடமாக்கிக் கொண்டது. அது மட்டுமின்றி, கேசவன் யானையின் சிறப்பான பழக்க வழக்கங்கள், பத்மநாபன் யானையையும் மிஞ்சியது. மேலும், தனக்கே உரித்தான சில உயர் பண்புகளையும் அந்த யானை பெற்றிருந்தது. குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி, தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவும். ஆலவட்டம், குடை, செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவும்.
தனி மனிதனாக, தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அது அனுமதித்ததில்லை. அதன் வழியாக, அந்த யானை அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் பெற்றது. 3.2 மீட்டர் உயரத்துடன் கம்பீரமான தோற்றம் கொண்ட கேசவன் யானை, மிகவும் கனிவான, பணிவான யானையாக மட்டும் அல்லாமல், குருவாயூரப்பனிடம் மிகவும் பக்தி கொண்டதாகவும் இருந்தது.
குருவாயூர் கோயிலின் வேள்விகள், விழாக்கள் மற்றும் நாள்தோறும் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகள் என்று கோயில் பல்வேறு சேவைகளுக்குப் கேசவன் யானை பயன்படுத்தப்பட்டது. கோயில் சார்ந்த எந்தவொரு நிகழ்வுகளிலும், யாருக்கும், எந்தவொரு துன்பமும் தராமல், கோயில் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டது. கோயில் பணிகளில் யானையின் ஒத்துழைப்பைக் கண்ட கோயில் நிர்வாகம், 1973 ஆம் ஆண்டில், அந்த யானையின் 60 ஆம் வயதில், அந்த யானைக்கு, ‘கஜராஜன்’ (யானைகளின் ராஜா) என்று சிறப்புப் பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.
1976 ஆம் ஆண்டில், டிசம்பர் 2 , நவமி அன்று, தங்கத்திடம்பு ஏற்றப்பட்ட கேசவன் யானை உடல் நடுக்கம் கண்டது. கால்நடை மருத்துவர்கள் விரைந்து வந்து மருந்து கொடுத்த பின்னரும், யானை எதையும் உண்ண மறுத்தது. மறுநாள் தசமி அன்று நின்றவாறே இருந்தது. தசமி இரவு விளக்கு ஆரம்பித்த மேள சப்தம் கேட்டதும் தண்ணீரைத் தன் துதிக்கையில் ஏந்திக் குளித்தது.
யானையின் பக்தியை மெச்சும் வகையில், 'குருவாயூர் ஏகாசசி' என போற்றப்படும் தலை சிறந்த வழிபாட்டு நாளன்று, குருவாயூர் கேசவனின் உயிர், அதன் உடலை விட்டுப் பிரிந்தது. குறிப்பாக, பக்தர்கள் ஏகாதசி விரதம் அன்று உண்ணாமல் இருப்பது போலவே, அன்றைய நாள் முழுவதும் கேசவன் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை, மேலும், மாலை வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக் கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தைச் சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலைப் புவியில் அர்ப்பணம் செய்து கொண்டே, அந்த யானையின் உயிர் பிரிந்தது.
அதனைத் தொடர்ந்து, குருவாயூரப்பனுக்காக நடத்தப் பெற்ற பல வேள்விகளிலும், விழாக்களிலும் மற்றும் தினசரி வழிபாடுகளிலும் கலந்து கொண்டு, இன்றியமையாத சேவைகள் புரிந்தமைக்காக, அதனைப் பாராட்டும் வழியில் குருவாயூர் கேசவன் எனப்படும் அந்த யானையின் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு கோவில் வளாகத்திலேயே குருவாயூர் கோயில் நிர்வாகத்தினரால் நிறுவப்பட்டுள்ளது. குருவாயூர் கேசவன் எனப்படும் அந்த யானையின் நீண்ட அழகான கொம்புகள் மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய படம் ஒன்று, முதன்மைக் கோவிலின் கதவுக்கு மேல் வைக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமின்றி, குருவாயூர் கேசவனின் நினைவு நாளான, குருவாயூர் ஏகாதசியன்று, அந்த யானையின் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான யானைகளின் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டு, அந்த யானை ஊர்வலத்தின் தலைமை யானையைக் கொண்டு, குருவாயூர் கேசவன் யானையின் சிலைக்கு, மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப் பெறுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெருமைக்குரிய யானையின் வாழ்க்கையைப் பின்பற்றி, 'குருவாயூர் கேசவன்' என்ற பெயரில் ஒரு மலையாள திரைப்படமும் எடுக்கப்பட்டது. இப்படம் கேரளத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இருந்தது. குருவாயூர் கேசவனின் கதையை சூர்யா தொலைக்காட்சி நிறுவனம் (2009—2010), கேப்டன் ராஜு, கேபிஏசி சஜீவ், கவியூர் பொன்னம்மா, சாலு மேனன், கொல்லம் அஜித் ஆகியோரைக் கொண்டு ஒரு தொடராகச் சித்தரித்து ஒலிபரப்பியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்த முறை குருவாயூருக்குச் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்பும் போது, குருவாயூர் கேசவன் யானை சிலையையும் கண்டு வணங்கி வாருங்கள்!