ARTICLE AD BOX
செய்தியாளர்: மருதுபாண்டி
திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி, இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றதாக தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் முகஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியுள்ளார்,
இந்நிலையில் தற்போது இவர் திருநெல்வேலி டவுணில் உள்ள முர்த்திம் ஜர்கான் தைக்காவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து தைக்கா அருகில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரமலான் நோன்பை துவங்கிய ஜாகிர் உசேன் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து தொழுகை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது டவுண் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி உள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுண் போலீசார், விசாரணை செய்தனர். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் கீதா சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தார், இதையடுத்து உடலை அங்கிருந்து எடுக்க ஜாகிர் உசேன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தகராறு காரணமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை சம்பவம் நடந்திருக்காது என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்த பிறகு உடற்கூறு பரிசோதனைக்காக உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலி டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.