ARTICLE AD BOX
ஓசூருக்கு விமான நிலையம் முக்கியம்.. பெங்களூருவாசிகளுக்கும் லாபம்- டிஆர்பி ராஜா தகவல்..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரம் மாநிலத்தின் முக்கிய பொருளாதார மையமாக உள்ளது. இங்கு சுமார் 500 பெரிய தொழிற்சாலைகள் மற்றும் 3,000 குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா எலக்டரானிக்ஸ், ஓலா, ஏதர்,சிம்பிள் எனர்ஜி மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி போன்ற பிரபலமான நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்நகரம் வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்தி, மேம்பட்ட உற்பத்தி, சரக்கு போக்குவரத்து மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. கூடுதலாக இந்த நகரம் மலர் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலை துறையில் வலுவான இருப்பை கொண்டுள்ளது.
இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு விஷுவல் கேபிடலிஸ்டின் அறிக்கையின்படி, ஆண்டுக்கு 5.38 சதவீத வளர்ச்சி விகிதத்துடன், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்நகரத்தில் மக்கள் தொகையும் சீராக வளர்ச்சி கண்டு வருகிறது. விஸ்வரூபம் கண்டு வரும் தொழில்துறை வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, அந்நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நகரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

2024 ஜூனில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகையில், ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் விதத்தில் இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையால் இந்த விமான நிலைய திட்டம் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் பெரிய தடையை எதிா்கொண்டுள்ளது. ஓசூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையம் பெங்களூரு விமான நிலையமான கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (கேஐஏ) 150 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது.
2004ல் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், கேஐஏ விமான நிலையத்திலிருந்து 150 கி.மீட்டர் வான்வழி தூரத்திற்குள் 25 ஆண்டுகள் வரை எந்த விமான நிலையமும் செயல்பட முடியாது என்ற நிபந்தனை இடம்பெற்றுள்ளது. 2019ல் கேஐஏ விமான நிலையம் திறக்கப்பட்டது. எனவே இந்த நிபந்தனை 2033ம் ஆண்டு வரை அமலில் இருக்கும். இந்த நிபந்தனைதான் ஓசூர் விமான நிலையம் அமைய பெரும் தடையாக உள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா 2 நாள் பயணமாக ஓசூர் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.பல்வேறு துறைகளில் குறிப்பாக மின்னணு மற்றும் மின்சார வாகனங்களில் தொடர்ச்சியான முதலீடுகள் வருவதால், அடுத்த 5 ஆண்டுகளில் ஓசூர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த விமான நிலையம் முக்கியமானது. இந்த விமான நிலையம் அமைவது இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, தெற்கு பெங்களூருவாசிகளுக்கு குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மற்றும் அதை சுற்றியுள்ளவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian