ARTICLE AD BOX

புதுடெல்லி,
வங்காளதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட மூத்த வீரர் முஷ்பிகுர் ரகீம் (வயது 37). சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அந்த அணி ஜொலிக்காத சூழலில், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ரகீம் வெளியிட்டார்.
இதுபற்றி அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், ஒரு நாள் போட்டிகளில் இருந்து இன்று முதல் ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி.
எங்களுடைய சாதனைகள் உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டபோதும், ஒரு விசயம் நிச்சயம். என்னுடைய நாட்டுக்காக எப்போதெல்லாம் நான் விளையாட களம் இறங்கினேனோ, 100 சதவீதத்திற்கு கூடுதலாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் அப்போது விளையாடினேன் என தெரிவித்து உள்ளார்.
கடந்த சில வாரங்கள் எனக்கு சவாலாக இருந்தன. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கடந்த 19 ஆண்டுகளாக என்னுடைய விளையாட்டை ரசித்து வரும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என அதில் பதிவிட்டு உள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக 2006-ம் ஆண்டு முதல் விளையாட தொடங்கிய ரகீம், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 7,795 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 9 சதங்களும், 49 அரை சதங்களும் அடங்கும்.