ARTICLE AD BOX
புது தில்லி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 39 ரன்கள் விளாசி, சமோவா அணி பேட்டர் டேரியஸ் விசர் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
உலகக் கோப்பை போட்டிக்கான கிழக்கு ஆசிய - பசிபிக் பிராந்திய தகுதிச்சுற்றில், வனாட்டு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் இந்தச் சாதனையை படைத்தார். இதுவரை, ஒரு ஓவரில் 36 ரன்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில், அதை டேரியஸ் விசர் தற்போது முறியடித்திருக்கிறார்.
மிடில் ஆர்டர் பேட்டரான அவர், வனாட்டு பெüலர் நலின் நிபிகோ வீசிய 15-ஆவது ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசினார். அதுபோக, நிபிகோ வீசிய 3 "நோ பால்'-களால் மேலும் 3 ரன்கள் கிடைத்தது. டேரியஸ் விசர் மொத்தமாக 62 பந்துகளில் 5 பவுண்டரிகள், 14 சிக்ஸர்களுடன் 132 ரன்கள் விளாசி வீழ்ந்தார். அவருக்கு இது 3-ஆவது டி20 ஆட்டமே ஆகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் சமோவா 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்க்க, வனாட்டு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களே எடுத்தது.