ARTICLE AD BOX
சேலம்: ‘இந்தி திணிப்பை கைவிடாவிட்டால், ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடத்தப்படும்’ என்று முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது மன்னர் ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதி, பேரிடர் நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியும் வழங்காமல் ஒருதலைபட்சமாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தேசிய கல்வி கொள்கை என்பது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் இதனை எதிர்க்கிறோம்.
ஒன்றிய அரசால் செயல்படக் கூடிய 49 நவோதயா பள்ளியில் ஒரு தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. ஆர்எஸ்எஸ்-சின் கொள்கையான ஒரே நாடு ஒரே மொழி என்ற நிலையை செயல்படுத்திடவே, ஒன்றிய அரசு இதனை அமல்படுத்த முயற்சி செய்கிறது.
நமது தாய்மொழியை காத்திட போர் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அண்ணாமலை தனிமைப்படுத்தப்படுவார். மும்மொழி கொள்கை என்ற பெயரில், இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் ரயில் நிலையம், தபால் நிலையம் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘விஜய் நினைப்பது நடக்காது’
முத்தரசன் கூறுகையில், ‘கடந்த 1967 மற்றும் 1977ல் நடந்ததை போல, 2026ல் தமிழகத்தில் புரட்சி நடக்கும் என நடிகர் விஜய் கூறுகிறார். புரட்சி என்பது ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர் நினைப்பது போன்ற பெரிய மாற்றம் ஏற்படாது. நடிகர் விஜய் கட்சி நிகழ்ச்சிகளில் அங்கு உள்ளவர்களை உற்சாகப்படுத்த பேசலாம். ஆனால் நாடகமாடுகிறார்கள், நடிக்கிறார்கள் என்று கூற கூடாது. விஜய் சினிமாவில் நல்லாக நடிக்க கூடியவர். எனவே, விஜய் அரசியல் நாகரிகத்தை முதலில் கற்க வேண்டும்’ என்றார்.
The post ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி அழிக்கும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு appeared first on Dinakaran.