ARTICLE AD BOX
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் சூழலில், முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி இன்று புதன்கிழமை சென்னை வந்தடைந்தார்.
தோனி சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் தோனி அணிந்திருக்கும் டி-ஷர்ட்டில் அச்சிடப்படப்பட்டிருக்கும் கோட் வேர்ட் (Morse Code) தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தோனி அணிந்திருக்கும் அந்த டி-ஷர்ட்டில், `கடைசியாக ஒருமுறை (One Last Time)' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தோனியின் கடைசி ஐ.பி.எல் சீசனாக இருக்குமோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் உண்மையில் அப்படி சொல்ல வருகிறாரா அல்லது வெறுமனே விளம்பரத்துக்காக அப்படி போட்டிருக்கிறாரா என்று சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் பரபரப்பாக விவாதித்து வருகிறார்கள்.
மோர்ஸ் கோட் என்றால் என்ன?
மோர்ஸ் கோட் அல்லது குறியீடு என்பது, புள்ளிகள் மற்றும் கோடுகளின் தொடர்ச்சியாக எழுத்துக்கள் மற்றும் எண்களை குறிக்கும் ஒரு தந்திக்குறியீடு. இது, டிட்ஸ் மற்றும் டாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.