ARTICLE AD BOX
புவனேஸ்வர்,
இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 18 வயதுக்கு உட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண் திருமணம் செய்து கொள்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆனால் இந்த சட்டத்தை மீறி ஒடிசா மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தை திருமணங்களாவது நடந்து வருவது தெரியவந்துள்ளது.
அங்கு கடந்த பிப்ரவரி வரையிலான முந்தைய 6 ஆண்டுகளில் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 1,347 திருமணங்கள் நபராங்கபூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன. மாநிலத்தில் குழந்தை திருமணம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக, குழந்தை திருமணத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் நம்ரதா சதா கூறியுள்ளார்.
அதாவது, பழங்குடியினர் குறிப்பாக மிகவும் பின்தங்கிய பழங்குடியின குழுக்களில் குழந்தை திருமணம் ஒரு பாரம்பரிய நடைமுறையாக உள்ளது. இதைப்போல வாழ்வாதாரத்துக்காக அடிக்கடி இடம்பெயரும் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்காக அவர்கள் சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்குள்ளேயே திருமணத்தை முடித்துவிட்டு இடம்பெயர்கிறார்கள்.
மேலும் தங்கள் பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி வேறு யாருடனும் சென்றுவிட்டால், தங்கள் குடும்பத்துக்கு அவமானம் எனக்கருதி குறைந்த வயதிலேயே திருமணத்தை முடித்து விடுகின்றனர். இதைத்தவிர வரதட்சணை போன்ற கூறுகளும் இந்த குழந்தை திருமணத்துக்கு காரணமாகி விடுவதாக நம்ரதா கூறியுள்ளார்.
இதற்கிடையே குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த மாநில அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பஞ்சாயத்து, ஒன்றியம் மற்றும் அங்கன்வாடி மட்டத்திலேயே 3 மாதங்களுக்கு ஒருமுறை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த துறைக்காக பல்வேறு அதிகாரிகளை நியமித்து மாவட்டம், மாநில அளவில் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.