ARTICLE AD BOX
கேகேஆர் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக விளையாடி கேகேஆர் அணி ஒரு குடும்பமாக மாறியதாகக் கூறியுள்ளார்.
கடந்தமுறை கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த அணி தனது முதல் போட்டியில் ஆர்சிபியை மார்ச்.22இல் எதிர்கொள்கிறது.
கோப்பையை வென்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் ரஹானே கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நட்சத்திர வீரர் சுனில் நரைன் பேசியதாவது:
ஐபிஎல் மிகவும் கடினமானது
மீண்டும் அணியில் இணைவது மகிழ்ச்சி. இங்கிருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கேகேஆர் ரசிகர்களை நேசிக்கிறேன். ஐபிஎல் மிகவும் கடினமானது.
ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க கடினமும் அதிகரிக்கிறது. அனைத்து அணிகளும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது. எதுவும் எளிதான போட்டி இல்லை.
கிரிக்கெட்டும் எவ்வளவோ பரிணமித்துள்ளது. அதனால், நீங்கள் பேட்டிங், பந்துவீச்சில் பங்களிக்க வேண்டும். இதில் உங்கள் தன்னம்பிக்கையும் உங்களது திறமை மீதான நம்பிக்கையும்தான் முக்கியம்.
உங்களுக்கு கடவுள் அளித்த திறமை இருக்கிறது. அதில் இருந்து சிறந்தவற்றை வெளிக்கொணருங்கள்.
ஐபிஎல் தொடரில் 14 ஆண்டு பந்தம்
உள்ளூர் கிரிக்கெட் போட்டியை ஒரு தொடராகவே கருதி வந்தேன். ஆனால், காலம் செல்ல செல்ல உறவுகள் மேம்படுகின்றன. அதனால் அணியே குடும்பம் போலாகிறது.
இது எனது 14ஆவது ஐபிஎல். ஐபிஎல் தாண்டி வெளியேவும் இவர்களுடன் விளையாடுகிறேன். அதனால், இது எனக்கு குடும்பம் போன்ற ஒரு அணிதான்.
ஒவ்வொரு முறையும் நான் கேகேஆர் இலச்சினையுடன் விளையாடும்போது இது எனக்கானது என உணர்வேன்.
கடந்த காலங்களில் கோப்பையை வென்ற பிறகு தடுமாறியிருக்கிறோம். அப்படிதான் வாழ்க்கையும் செல்கிறது. ஆனால், மீண்டும் கோப்பையை வெல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.