ARTICLE AD BOX
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.போட்டியின் 18-வது சீசன் இன்று கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகளும் ஐபிஎல் கோப்பைக்கான போரில் போட்டியிடத் தயாராகி வருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தமுறை பல்வேறு நகரங்களில் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் 22,23ம் தேதிகளிலும், நெல்லையில் 29,30ம் தேதிகளிலும், மதுரையில் ஏப்ரல் 5,6ம் தேதிகளிலும், திருச்சி மே 3,4ம் தேதிகளிலும் போட்டிகள் திரையிடப்பட உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் புதிய விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று மாற்றங்களைப் பார்க்கலாம்.
பந்து ரிவர்ஸ் ஸ்விங் :
வேகப்பந்து வீச்சாளர்கள், பந்து பழசாகும் போது ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வதற்கு அதன் மீது எச்சிலை அடிக்கடி தேய்த்து பளபளப்பாக்குவார்கள். ரிவர்ஸ் ஸ்விங்கில் பந்து எந்த பக்கம் நகரும் என்பதை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திண்டாடுவது உண்டு.
இந்த நடைமுறைக்கு கொரோனா காலத்தில் ஐசிசி தடைவிதித்தது. கொரோனா காலகட்டத்தில் பந்து மீது எச்சிலை தேய்ப்பதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருந்ததால் முன் எச்சரிக்கையாக 2020-ம் ஆண்டு முதல் நிரந்தரமாக எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பந்தை பளபளப்பாக்க வியர்வையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது. ஆனால் முன்பு போல் தங்களால் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை என்றும் அதனால் எச்சிலால் தேய்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் 10 அணிகளின் கேப்டன்களுடன், புதிய விதிமுறைகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பெரும்பாலான கேப்டன்கள், பந்து மீது எச்சிலை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரண்டு பந்து பயன்படுத்தும் முறை :
2-வது புதிய விதிமுறையாக இரவு ஆட்டங்களில் 2-வது பேட் செய்யும் போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. ஈரமான பந்தை பவுலர்களால் சரியாக பிடித்து துல்லியமாக வீச முடியாததால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்குவித்து விடுகிறார்கள். இதனால் பெரும்பாலும் 2-வது பேட் செய்யும் அணியே வெற்றி பெறும் சூழல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த சீசனில் இரண்டு பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இந்த சீசன் ஐபிஎல்லில் இரவு நேர போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸில் 11-வது ஓவரில் இருந்து பந்து வீசும் அணியின் கேப்டன் பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக நினைத்தால் நடுவரிடம் ஆலோசித்து புதிய பந்தை கேட்டு பயன்படுத்தலாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இம்பேக்ட் விதி :
3-வதாக ‘இம்பேக்ட்’ வீரர் விதிமுறை குறித்தும் கேப்டன்களிடம் ஆலோசிக்கப்பட்டது. இந்த விதிமுறை கடந்தாண்டு ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்தது, இது ஆல்-ரவுண்டர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று பலர் பரிந்துரைத்தனர். இந்த விதிமுறைக்கு ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முன்பு எதிர்ப்பு தெரிவித்தாலும், வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இருப்பதால் ஏற்கனவே அறிவித்தபடி இந்த விதிமுறை 2027-ம் ஆண்டு வரை தொடரும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.