ARTICLE AD BOX
2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. கொல்கத்தாவை அஜிங்கியா ரஹானேவும், ஆர்சிபியை ரஜத் பட்டிதாரும் வழிநடத்துகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் விழாவை தொடங்கி வைக்க, ஸ்ரேயா கோஷல், கரன் அவ்ஜ்லா மற்றும் திஷா பதானி முதலியோர் பாடல் மற்றும் ஆடலுடன் விழாவை மேலும் சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து ஷாருக் கான், விராட் கோலி, ரிங்கு சிங் மூன்றுபேரும் மேடையில் ஒன்றாக நடனமாடி மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டு, கேக் வெட்டப்பட்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது.
174 ரன்கள் குவித்த கொல்கத்தா..
மழை பெய்யும் என்றெல்லாம் சொல்லப்பட்டு நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்தில் தொடங்கப்பட்ட போட்டி, ஒரு தலைசிறந்த போட்டியாக மாறி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார் பந்துவீச்சை தேர்வுசெய்ய, கொல்கத்தா அணியில் முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே டிகாக் விக்கெட்டை வீழ்த்திய ஹசல்வுட் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 3 ஓவர்களில் 9/1 என இருந்த கேகேஆர் அணி, அதற்குபிறகு 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய கேப்டன் ரஹானேவின் அதிரடியான ஆட்டத்தால் 10 ஓவரில் 100 ரன்களை கடந்து மிரட்டியது.
அஜிங்கியா ரஹானே 56 ரன்களும், சுனில் நரைன் 44 ரன்களும் எடுத்து வெளியேற, கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 109 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. எப்படியும் 200 ரன்களுக்கு மேல் வரும் என எதிர்ப்பார்த்தபோது, ஒரு தலைசிறந்த ஸ்பின் பவுலிங்கை வீசிய க்ருணால் பாண்டியா வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் இருவரின் ஸ்டம்பையும் தகர்த்தெறிந்து ஆட்டத்தையே திருப்பினார்.
4 ஓவரில் வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய க்ருணால் பாண்டியா, கொல்கத்தா அணியின் ரன்வேகத்தை இழுத்துபிடித்தார். அடுத்து களத்திற்கு வந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் விக்கெட்டை சுயாஷ் ஷர்மா வீழ்த்த, ஆர்சிபி கம்பேக் கொடுத்தது. கடைசியில் ரகுவன்சி மற்றும் ரமன்தீப் சிங் இருவரும் தங்களால் ஆன முயற்சியை வெளிப்படுத்த 20 ஓவரில் 174 ரன்களை மட்டுமே சேர்த்தது கொல்கத்தா அணி.
கோலி, சால்ட் அதிரடி ஆட்டம்..
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டிய பிலிப் சால்ட் கேகேஆர் அணியின் முக்கிய பவுலரான வருண் சக்கரவர்த்திக்கு எதிராக ஒரே ஓவரில் 21 ரன்கள் அடித்தார். அதனைத்தொடர்ந்து பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட விராட் கோலி மிரட்டிவிட்டார்.
9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய சால்ட் 56 ரன்கள் அடித்து வெளியேற, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட கோலி ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்டிதார் 16 பந்தில் 34 ரன்கள் அடித்து அசத்தினார், உடன் லியாம் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட 16.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.