ARTICLE AD BOX

ஐபிஎல் 2008 தொடக்க போட்டி தோல்வி; 17 ஆண்டுகள் கழித்து கேகேஆரை பழி தீர்த்த விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இது 2008 ஆம் ஆண்டு நடந்த தொடக்க ஐபிஎல் போட்டியுடன் ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர், தனது உள்ளூர் மைதானமான ஈடன் கார்டனில் போட்டி நடந்ததால், முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் வலுவாகத் தொடங்கியது.
ஆனால் அஜிங்க்யா ரஹானே (56 ரன்கள்கள்) மற்றும் சுனில் நரைன் (44 ரன்கள்) ஆகியோரின் விக்கெட் இழப்பிற்குப் பிறகு வேகத்தை இழந்தது. இறுதியில் ஆர்சிபி அணிக்கு 174 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
ஆர்சிபி
ஆர்சிபி வெற்றி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கேகேஆர் அணியை கட்டுப்படுத்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது.
பில் சால்ட் (50 ரன்கள்) மற்றும் விராட் கோலி (53* ரன்கள்) என கேகேஆரின் தவறான பந்துவீச்சு உத்தியைப் பயன்படுத்தி, பவர்பிளேயில் 80 ரன்கள் குவித்தனர்.
கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த விராட் கோலி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டி ஆர்சிபி அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.
முன்னதாக, இதில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய சில ஓவர்களிலேயே ஆர்சிபி வெற்றி பெறுவது உறுதியாகி, போட்டி ஒருதலைப்பட்சமாக செல்ல ஆரம்பித்துவிட்டது.
2008
ஐபிஎல் 2008 தொடக்க ஆட்டம்
குறிப்பிடத்தக்க வகையில், இது ஐபிஎல் 2008 தொடக்க போட்டியைப் போலவே அமைந்துள்ளது. அதிலும் கேகேஆர் vs ஆர்சிபி மோதிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 222 ரன்கள் குவித்தது.
அடுத்து பேட்டிங் செய்த ஆர்சிபி முதல் சில ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி தோல்வியடைவது உறுதியாகி போட்டி ஒருதலைப்பட்சமாக முடிந்தது.
அந்த போட்டி ஆர்சிபியின் உள்ளூர் மைதானமான பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த நிலையில், உள்ளூரில் பெற்ற தோல்விக்கு தற்போது 17 வருடங்கள் கழித்து கேகேஆரை அதன் உள்ளூரில் பழி தீர்த்துள்ளது.
2008 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் விளையாடிய விராட் கோலி, தற்போது வெற்றிக்கு முக்கிய பங்களித்து அவரே தோல்விக்கு பழி தீர்த்தது போல் இந்த போட்டி அமைந்துள்ளது.