ARTICLE AD BOX
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகம் உள்ளது. அதன்பின்புறம், கடந்த சில ஆண்டுகளாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும், அன்றாடம் அந்தக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதனால் காற்று மாசடைதுடன், துர்நாற்றம் வீசி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக, தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஊரணி மாசுபட்டுள்ளதாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், "மதுரை கோவில் நகரமாக இருக்க வேண்டியது, குப்பை நகரமாக மாறிவிட்டது" என வேதனை தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் கருத்திற்குப் பின்னர், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் தலைமையில், ஐந்து ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் குப்பைகள் அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா, "இந்தக் குழப்பத்திற்கு காரணமானவர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை?" என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும், இனிமேல் இந்த பகுதியில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படாத வகையில், சி.சி.டி.வி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும் எனவும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குப்பைகளை அகற்றும் பணியை ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இந்துமதி, இன்ஜினியர் சுரேஷ், கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்தனர். நீதிமன்ற உத்தரவால் தற்போது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். மேலும், அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்காமல், மாசு பிரச்சனையை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.