ARTICLE AD BOX
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) தொடங்கிய நிலையில், இன்று சென்னையில் நடைபெறும் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழாவில், இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கிரிக்கெட் உலகில் ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் தொடர் ஐபிஎல் கிரிக்கெட். இந்த தொடரின் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தொடங்கிய முதல் போட்டியில் பெங்களூர் அணி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே – எம்.ஐ அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் நிலையில், போட்டிக்கு முன்னதாக, எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான அனிருத், சேப்பாக்கம் மைதானத்தில் 20 நிமிட நிகழ்ச்சி நடத்துவார் என்று, ஸ்போர்ட்ஸ்டார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பின் மூலம் அனிருத்தும் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது, அனிருத்துடன், ஒரு நடனக் குழுவும் இருக்கும் என்றும், அவரது நிகழ்ச்சி மாலை 6:30 மணிக்கு தொடங்கி போட்டி டாஸ் போடுவதற்கு, சற்று முன்பு முடிவடையும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விழாக்களில் பங்கேற்க ஆர்வமுள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், மாலை 4:30 மணி முதல் பொது மக்களுக்கு அரங்க வாயில்கள் திறக்கப்படும். போட்டிக்கு முந்தைய கொண்டாட்டங்களை அனுபவிக்கவும், மைதானத்திற்குள் சுமூகமாக நுழையவும் பங்கேற்பாளர்கள் சீக்கிரமாக வருமாறு கூறியுள்ளனர்.
சேப்பாக்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும், சர்வதேச போட்டிகளின் போதும் கூட அனிருத் பாடல்கள் பரவலாகப் பேசப்படுவதால், சிஎஸ்கேவுடனான அவரது தொடர்பு நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மார்ச் 16 அன்று, அவர் ‘லியோ—தி அன்டோல்ட் ஸ்டோரி’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார், மேலும் புத்தகத்தைப் பெற்ற முதல் நபரானார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.எஸ். ராமன் எழுதிய இந்தப் புத்தகம், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக மாறுவதற்கான சிஎஸ்கேவின் பயணத்தை பற்றி விவரிக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவில் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஷ்வினும் கலந்து கொண்டார்.