ARTICLE AD BOX

image courtesy: @IndSuperLeague
மும்பை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த 12-ந் தேதி முடிந்த லீக் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி.கோவா, பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி., நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
ஒடிசா, கேரளா, ஈஸ்ட் பெங்கால், பஞ்சாப், சென்னை, ஐதராபாத், முகமதின் ஆகிய அணிகள் முறையே 7 முதல் 13 இடங்களை பிடித்து தொடரில் இருந்து வெளியேறின. புளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.
3 முதல் 6 இடங்களை பிடித்த அணிகள் 'நாக்-அவுட்' சுற்று ஆட்டத்தில் ஒரு முறை மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். அரையிறுதி ஆட்டம் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 ஆட்டங்கள் கொண்டதாகும்.
இந்த போட்டிக்கான 'பிளே-ஆப்' சுற்று அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி வருகிற 29-ந் தேதி நடைபெறும் முதலாவது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் 3-வது இடம் பிடித்த பெங்களூரு, 6-வது இடம் பெற்ற மும்பை சிட்டி அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. 30-ந் தேதி நடைபெறும் 2-வது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் 4-வது இடம் பிடித்த நார்த் ஈஸ்ட் யுனைடெட், 5-வது இடம் பெற்ற ஜாம்ஷெட்பூர் அணிகள் ஷில்லாங்கில் மோதுகின்றன.
ஏப்ரல் 2-ந் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதியின் முதலாவது சுற்றில் முதலாவது நாக்-அவுட்டில் வெற்றி பெறும் அணி, எப்.சி.கோவாவுடன் மோதும். ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியின் முதல் சுற்றில் 2-வது நாக்-அவுட்டில் வெற்றி பெறும் அணி, மோகன் பகானை சந்திக்கும்.
ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதியின் 2-வது சுற்றில் எப்.சி.கோவா அணியுடன், முதலாவது நாக்-அவுட்டில் வெற்றி பெறும் அணி மோதும். ஏப்ரல் 7-ந் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியின் 2-வது சுற்றில் மோகன் பகானை, 2-வது நாக்-அவுட்டில் வெற்றி பெறும் அணி சந்திக்கும். ஏப்ரல் 12-ந் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.