ARTICLE AD BOX
ஏப்ரல் 1 முதல்.. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் நாடு முழுவதும் அமல்..!
இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மிகச்சிறந்த ஓய்வு கால பலன்கள் கிடைக்க உள்ளன.
மத்திய அரசு அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகியவற்றை ஒன்றிணைத்து இந்த ஓய்வூதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் தங்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றிலிருந்து 10 சதவீதம் தொகையை ஓய்வூதியத்திற்கான பங்களிப்பாக வழங்குவார்கள். அதே வேளையில் இந்த ஊழியர்களுக்காக அரசு அளிக்கும் பங்களிப்பு முன்பு 14 சதவீதமாக இருந்து தற்போது 18.5 சதவீதமாக உயர்த்தப்படும். அதாவது ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் அரசின் பங்களிப்பு அதிகரிக்கிறது.
இது தவிர அரசு கூடுதலாக 8.5 சதவீத பங்களிப்பு செய்து அது ஒரு தனி நிதி தொகுப்பாக இருக்கும். தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ்ஸில் ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஒரு விருப்ப தேர்வாக வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஊழியர்கள் கடைசியாக பெற்ற 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு சமமான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். ஆனால் குறைந்தது 25 ஆண்டு காலம் மத்திய அரசு பணியில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். 10 முதல் 25 ஆண்டுகளுக்கு உட்பட்ட சேவை காலம் கொண்டவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதிய தொகை நிர்ணயம் செய்யப்படும்.
அரசு ஊழியர்கள் திடீரென இறக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கு அவருக்கான ஓய்வூதியத்தில் 60 சதவீதம் தொகை கிடைக்கும். கிராஜுவிட்டி மற்றும் ஓய்வு பெறும் போது ஒரு ரொக்கம் ஆகிய பலன்களும் கிடைக்கும். இதன்படி குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது.
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு தானாக முன்வந்து ஓய்வு பெறத் தேர்வுசெய்யும் ஊழியர்களும், உண்மையான ஓய்வு வயதிலிருந்து ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika