ARTICLE AD BOX
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிவருகின்றன. விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட போட்டியில், நியூசிலாந்து வீரர்கள் வில் யங் மற்றும் டாம் லாதம் இருவரும் அபாரமாக விளையாடி சதமடித்த நிலையில் 50 ஓவரில் 320 ரன்களை குவித்து மிரட்டியது நியூசிலாந்து அணி.
இந்த சூழலில் சொந்த மண்ணில் எப்படியும் 321 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் எட்டிவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஃபார்மில் இருக்கும் அதிரடி வீரர் ஃபகார் ஜமான் தொடக்க வீரராக களமிறங்காமல், ஷாத் ஷக்கீல் ஓப்பனிங் வீரராக களத்திற்கு வந்தார்.
வந்தவேகத்திலேயே ஷக்கீல் நடையை கட்ட, அடுத்தும் ஃபகார் களமிறங்காமல் கேப்டன் முகமது ரிஸ்வான் களமிறங்கினார். துரதிருஷ்டவசமாக ரிஸ்வானும் 3 ரன்னில் வெளியேறினார்.
ஏன் ஃபகார் ஜமான் தொடக்கவீரராக களத்திற்கு வரவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஐசிசி விதிமுறையால் விளையாடமுடியாமல் போனது விளக்கப்பட்டுள்ளது.
ஏன் ஃபகார் ஜமான் அனுமதிக்கப்படவில்லை?
நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது போட்டியின் இரண்டாவது பந்திலேயே ஃபீல்டிங் செய்த ஃபகார் ஜமானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பந்தை விரட்டி சென்று ஃபீல்டிங் செய்த அவர், கால் மற்றும் முதுகை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். பின்னர் மைதானத்திலிருந்து வெளியேறிய அவர் நீண்டநேரமாக களத்திற்கு திரும்பவில்லை.
இந்நிலையில் ஐசிசி விதிமுறையின் படி ஒரு வீரர் எவ்வளவு நேரம் ஃபீல்டிங்கில் இருந்து வெளியேறுகிறாரோ, அதேஅளவு நேரம் அவர் பந்துவீசவோ, பேட்டிங் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார். இந்த பெனால்டி நேரம், அடுத்த இன்னிங்ஸில் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும். இந்த சூழலில் தான் ஃபகார் ஜமான் தொடக்க வீரராக பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஐசிசியின் இந்த விதிமுறையால் சிறப்பான தொடக்கத்தை பெறமுடியாமல் போன பாகிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகளையும் விரைவாகவே இழந்து தடுமாறி வருகிறது.