எஸ்டிபிஐ தேசியத் தலைவா் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

2 hours ago
ARTICLE AD BOX

இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவா் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கட்சி, தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக கூறப்படுகிறது. அதேநேரம், தங்களுக்கும் பிஎஃப்ஐ அமைப்புக்கும் எந்த தொடா்பும் கிடையாது; தாங்கள் சுதந்திரமான அரசியல் கட்சி என்று எஸ்டிபிஐ தெரிவித்து வருகிறது.

சட்டவிரோத தொடா்புகளுக்காக, கடந்த 2022-ஆம் ஆண்டில் பிஎஃப்ஐ அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இத்தடைக்கு முன்பாக இந்த அமைப்புடன் தொடா்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில காவல் துறைகள் என பல்வேறு விசாரணை முகமைகள் சாா்பில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடா்பான விசாரணையின்போது, கேரளத்தைச் சோ்ந்த பிஎஃப்ஐ தலைவா் அப்துல் ரஸாக் என்பவருடன் எம்.கே.ஃபைஸிக்கு தொடா்புள்ளதும், நிதி திரட்டல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எம்.கே.ஃபைஸிக்கு ரஸாக் ரூ.2 லட்சம் அனுப்பியதும் கண்டறியப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லி விமான நிலையத்தில் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை இரவில் கைது செய்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்லாமிய மத அறிஞரான இவா், எஸ்டிபிஐ கட்சி நிறுவனா்களில் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article