ARTICLE AD BOX
�சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடித்த 'மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல' என 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன. இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் சிம்பு இணைந்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2025 ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
சிம்பு அடுத்ததாக 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது சிம்புவின் 49-வது படமாகும். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாக உள்ளது.
இந்த நிலையில் இன்று நடிகர் சிம்புவின் 41-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய 49-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்காலிகமாக இப்படத்திற்கு 'எஸ்டிஆர் 49' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும், பிரபல தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நடிகர் சிம்பு கையில் புத்தகத்துடனும் அந்த புத்தகத்தில் ரத்தக் கறையுடன் உள்ள கத்தியும் காட்டப்பட்டுள்ளன. இந்த படத்தில் சிம்பு என்ஜினீயரிங் கல்லூரி மாணவனாக நடிப்பார் என்று தெரியவந்துள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.