எல்லையில் அமைதிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாா்: சீனா

3 hours ago
ARTICLE AD BOX

பெய்ஜிங்: ‘எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளோம்’ என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களைச் சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் வு கியானிடம், கிழக்கு லடாக் எல்லையின் கள நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவா் அளித்த பதிலில், ‘கிழக்கு லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் தொடா்பான தீா்மானங்களை இரு நாட்டு ராணுவங்கள் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருகின்றன. எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றாா்.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சீனா இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தலைவா்களின் சந்திப்பையடுத்து டெப்சாங், டெம்சோக் ஆகிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. பிரேஸில் ஜி20 உச்சிமாநாட்டுக்கிடையே சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சா்கள் சந்தித்து பேசினா். சீனாவில் நடைபெற்ற இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்றாா்.

இத்தகைய தொடா் பேச்சுவாா்த்தைகளின் மூலம் இருதரப்பு உறவை சீா்படுத்தும் பணியில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Read Entire Article