எல்ஜிபிடிக்யூ புறக்கணிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கையின் விளைவுகள் எத்தகையது?

6 hours ago
ARTICLE AD BOX

Published : 23 Jan 2025 08:23 PM
Last Updated : 23 Jan 2025 08:23 PM

எல்ஜிபிடிக்யூ புறக்கணிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கையின் விளைவுகள் எத்தகையது?

<?php // } ?>

சர்வ வல்லமை பொருந்தியநாடாக அறியப்படும் அமெரிக்காவின் 47-வது அதிபராகியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அதன் அதிர்வலைகள் இருக்கத்தானே செய்யும் என்பது போல் உலக நாடுகளுக்கான எச்சரிக்கை தொடங்கி உள்நாட்டிலேயே அதிரடி உத்தரவுகளும் அமலாகி வருகின்றன. “கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்..” என்று எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தினருக்காகவும், குடியேறிகளுக்காகவும் இறைஞ்சிய மதபோதகருக்கு, “அரசியலை தேவாலயத்துக்குள் கொண்டுவருவதா?” என்று கடுமை காட்டியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

தனது முதல் உரையிலேயே “இனி ஆண், பெண் என இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்” என ட்ரம்ப் முழங்கியது, இன வெறுப்பின் நீட்சியா என்று வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆசிய நாடுகளில் தைவான், நேபாளத்துக்குப் பின்னர் இத்தகைய திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய மூன்றாவது நாடு, தென் கிழக்கு ஆசியா நாடுகளில் முதலாவது நாடு என்ற அந்தஸ்தை தாய்லாந்து பெற்றுள்ளது.

ஆசிய நாட்டின் அண்மைச் செய்தியாக இது இருக்க, அங்கே அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், எல்ஜிபிடிக்யூ சமூகத்தினருக்கு எதிராக சாட்டையை சுழற்றிக் கொண்டிருக்கிறார். ட்ரம்பின் முழக்கமும், நடவடிக்கைகளும் எல்ஜிபிடிக்யூ (லெஸ்பியன், கே, பைசெக்ஸுவல், டிரான்ஸ்ஜெண்டர், க்யூயர்) சமூகத்தினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஷப்புக்கு பதிலடி: அதிபர் ட்ரம்பின் பதவியேற்பு பிரார்த்தனைக் கூட்டத்தில், வாஷிங்டனின் ஆயரான பிஷப் மேரி ஆன் எட்கர் பட்டே, "எல்ஜிபிடிக்யூ மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். அந்த அளவுக்கு ட்ரம்ப் கடுமை காட்டக்கூடும் என்ற கணிப்புகளால் கூட அவர் அப்படி இறைஞ்சியிருக்கலாம். ஆனால், பிஷப் பட்டேவை ‘ட்ரம்ப் வெறுப்பாளர்’ என்று அதிபர் முத்திரை குத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ”தேசிய பிரார்த்தனைக் கூட்டத்தில் உரையாற்றிய பிஷப் தீவிர இடது சாரியும், ட்ரம்ப் வெறுப்பாளரும் ஆவார். அவர் தேவாலயத்துக்குள் அரசியலை கொண்டுவந்துள்ளார். அவருடைய உரையின் தொனி மோசமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரக்கத்துக்கு வாய்ப்பில்லை... - இரக்கம் காட்ட வாய்ப்பில்லை என்பதுபோல் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து “lesbian” “bisexual” “gay” “transgender” “sexual orientation” “gender identity” போன்ற வார்த்தைகள் அதற்கு தொடர்புடைய வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெள்ளை மாளிகை இணையதளத்தில் “LGBTQ” என்ற வார்த்தையைத் தேடினால் ‘ஜீரோ ரிசல்ட்ஸ்’ என்று காட்டுகிறது. அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட் மற்றும் தடுப்பு மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் எல்ஜிபிடிக்யூ என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது. இதனை க்ளாட் (GLAAD) என்ற எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரின் உரிமைகள் தொடர்பான தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலரும் பொதுவெளிக்கு வருவதற்கே கூட அச்சம் கொண்டுள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பைடன் vs ட்ரம்ப்: முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா முழுவதும் சட்டபூர்வமானது. முன்பு 36 மாகாணங்களில் மட்டுமே தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா முழுவதுமே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா கடந்த 2022-ஆம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்கள் நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும் சூழல் உருவானது.

இந்த மசோதா நிறைவேற்றம் பற்றி பேசிய அப்போதைய அதிபர் பைடன், “அமெரிக்கா இன்றொரு அடிப்படை உண்மையை நிலைநிறுத்தியுள்ளது. அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த உண்மை” எனப் பேசியிருந்தார். அந்தப் பேச்சு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், அதற்கு அப்படியே எதிர்மறையாக அமெரிக்காவின் இப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் உரையிலேயே, “இன்றைய நிலவரப்படி, ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்” என்று முழங்கியுள்ளார். அதற்கு இப்போது செயல் வடிவமும் கொடுத்து வருகிறார்.

ட்ரம்ப் நடவடிக்கைகள் தொடர்பாக ஏசிஎல்யு என்ற எல்ஜிபிடிக்யூ உரிமைகளுக்கான அமைப்பின் இணை இயக்குநர் அளித்தப் பேட்டியில், “அமெரிக்கா மத்திய அமைப்புகளுக்கு அரசு உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆண், பெண் இருபாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் மாற்றங்களை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த உத்தரவு எல்ஜிபிடிக்யூ சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அச்சமூகத்தினர் சுகாதார சேவைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுத்தும், பள்ளிகளில் பொது இடங்களில் அச்சமூகத்தினருக்கு இருந்த பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும். இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார்.

அடிப்படைவாதம், இனவாதம், பாலின புறக்கணிப்பு... - ட்ரம்ப் நடவடிக்கைகள் குறித்து மதுரையைச் சேர்ந்த இடையலிங்கத்தவர் கோபிஷங்கர் (* இடையிலிங்கத்தவர் (Intersex) - ஆண், பெண் என்ற வரையறைக்குள் வராமல் இரண்டு பாலினப் பண்புகளோடு பிறக்கும் உயிர்) கூறுகையில், “அமெரிக்காவில் இன்றும், வெள்ளை மேலாதிக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் இருக்கின்றனர். ட்ரம்ப் வெள்ளை மேலாதிக்கத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறார். கமலா ஹாரிஸா அல்லது ட்ரம்பா என்று வரும்போது ட்ரம்ப்புக்கே ஆதரவு இயல்பாக அதிகமாக இருக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய சில கருத்துக் கணிப்புகள் கூறின. அது உண்மைதானோ என்பதுபோல் ட்ரம்ப் வெற்றியும் பெற்றார். அதேபோல், ட்ரம்புக்கு கிறித்துவ மத அடிப்படைவாதிகளின் ஆதரவும் இருக்கிறது.

அவற்றின் தாக்கத்தினாலேயே தேர்தல் உரைகளிலேயே கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று ட்ரம்ப் பேசினார். இப்போது அதிபரான பின்னர் முதல் உரையிலேயே இரண்டு பாலினங்கள் தான் அங்கீகரிக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கோபிஷங்கர்

ஒரு குழந்தை பிறக்கும்போது அதற்கு பால் அடையாளம் (sex identity) வழங்கப்படுகிறது. பிறப்புறுப்பைப் பொறுத்து குழந்தை ஆண், பெண் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆண் என்றால் XY குரோமோஸோம்கள், பெண் என்றால் XX குரோமோஸோம்கள், இன்டர்செக்ஸ் நபர்களுக்கு XXX,XXY உள்பட பல வகையான குரோமோஸோம் கட்டமைப்புகள் உள்ளன. நான் ஒரு இன்டர்செக்ஸ் நபர். அதேபோல், ஒரு பெண்ணாக பிறந்த நபர் ஆணாக வாழ நினைத்தால் அவர் திருநம்பி ஆகிறார். ஆணாகப் பிறந்த நபர் பெண்ணாக வாழ விரும்பினால் அவர் திருநங்கை ஆகிறார். மாற்று பாலினத்தவர் பல பால் புதுமைகளுடன் இருக்கிறார்கள். ஆனால், குழந்தை வளர வளர அதற்கு பாலின அடையாளம் (gender identity) திணிக்கப்படுகிறது. பாலின அடையாளங்களை ஏற்க முடியாதபோது பாலின புறக்கணிப்பு உருவாகிறது.

இதுதான் ட்ரம்ப் உரையில் பிரதிபலிக்கிறது. இது நல்ல சமிக்ஞை அல்ல. இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்கா என்றால் மனித உரிமை, அமெரிக்கா என்றால் சுதந்திரம், அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ளும் சிலர் அமெரிக்கா என்றால் பேதங்கள் நிறைந்தது என்பதை ட்ரம்ப்பின் உரை தோலுரித்துக் காட்டியுள்ளது. அமெரிக்காவில் சகிப்புத்தன்மை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது” என்றார்.

‘அதிர்வலைகளைக் கடத்தும்’ - அமெரிக்கா பல்வேறு நிலைகளில் வல்லரசாக இருப்பதாலேயே அமெரிக்காவின் சட்டத்திட்டங்களும் உலகுக்கு ஓர் முன்மாதிரியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ட்ரம்ப்பின் எல்ஜிபிடிக்யூ சமூகத்துக்கு எதிரான கருத்துகள் ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அங்கே ஒரு கிறிஸ்துவ சபையை வழிநடத்தும் இளம் பாதிரியார், “ட்ரம்ப்பின் அறிவிப்பை வரவேற்கிறேன். இன்று திடீரென இளம் தலைமுறையினர் நான் பெண்ணாக உணர்கிறேன், ஆணாக உணர்கிறேன் என்றெல்லாம் பாலினத்தை மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ட்ரம்ப்பின் உத்தரவு சமுதாயத்துக்கு நீதி, ஒழுங்கு மற்றும் நல்லறிவு ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருதலாகும்” என்று புகழ்ந்துள்ளார். ட்ரம்ப் உத்தரவுக்கு உலகளவில் ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது.

ட்ரம்ப்பின் உத்தரவு உலகளாவிய தெற்கில் உள்ள LGBTQ சமூக உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும். புறக்கணிப்புகள் நீளும். உலக நாடுகள் ஏதேனும் அமெரிக்க உத்தரவை அளவுகோலாகக் கொண்டு சட்டங்களை இயற்றக் கூடும். ஒட்டுமொத்தமாக அன்புக்கு ஒரு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

ட்ரம்பின் பதவியேற்பு உரையானது, அமெரிக்க சமூகத்தில் இனம் மற்றும் பாலினம் பற்றிய சில கருத்துகளை, புதிய சிந்தனைகளை ஊக்குவிப்பதை அரசாங்கம் தடுக்கலாம் என்ற திட்டத்தை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது எனலாம். அன்பினால் ஆனது அல்ல சமூகம் பிரிவினைகளால் ஆனதுதான் என்பதை வலியுறுத்துவது போல் இருந்தது எனலாம். அந்த வகையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டுமே அங்கீகாரம் என்ற ட்ரம்ப் உத்தரவு அமெரிக்காவில் இன்றும் ஓயாத இன வெறுப்பின் நீட்சி என்றும் கொள்ளலாம்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article