ARTICLE AD BOX

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
எம்புரான் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிருத்விராஜ், நடிகர் மோகன்லால் கலந்துகொண்டார்கள். அதில் பிருத்விராஜ் " இந்தப் படத்தில் நடிக்க மோகன்லால் ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை. இது மிகப்பெரிய விஷயம். ஒரு சிலர் மட்டுமே இப்படி இருக்கிறார்கள். அக்ஷய் குமார் அப்படி இருந்திருக்கிறார். நாங்கள் இதுவரை இல்லாத ஒன்றை முயற்சித்து இருக்கிறோம். அதற்கு இப்படி எல்லாம் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் அது சாத்தியமாகும். ரூ.100 பட்ஜெட்டில் ரூ.80 கோடி நடிகர்களுக்கே செலவு செய்வதுபோல் இந்தப் படத்தை எடுக்கவில்லை. மொத்த செலவும் படத்தை உருவாக்க மட்டுமே உபயோகித்து இருக்கிறோம். மலையாளம் தவிர்த்து மற்ற மொழி நடிகர்களும் இந்தப் படத்துக்காக ஒத்துழைப்பு அளித்துள்ளார்கள்" என்றார்.