ARTICLE AD BOX
கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்வதற்கு முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். காங்கிரஸ் மாடல்படி மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தென்னிந்தியாவில் 100 சீட் குறையும். அதை ஏற்று கொள்ளமாட்டேன் என பிரதமர் மோடி சொல்லியுள்ளார். 2001ல் செய்ய வேண்டிய தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு வாஜ்பாய் ஒத்திவைத்தார்.
தொகுதி மறுசீரமைப்பு வரும் போது தமிழகத்திற்கு பிரச்னை இல்லாமல் கொண்டு வருவது எங்களது பொறுப்பு. தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயம். இந்தியாவில் எம்.பி.க்கள் அதிகமாக வேண்டும். தொகுதி மறுசீரமைப்பை எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு மற்றும் பிரச்னை இல்லாத வகையில் கொண்டு வருவோம். உ.பி, கர்நாடகா, ம.பி.யில் மூன்றாவது மொழியாக தமிழ் உள்ளது. அப்துல்கலாம் பல மொழி பேசுவார். அவர் படிக்கும்போது இரண்டு மொழிதான் இருந்தது.
அவர் இந்தி பேசமாட்டேன், ஜனாதிபதி ஆகமாட்டேன் என்று கூறியிருந்தால், ராமேஸ்வரத்தில்தான் இருந்திருப்பார்.நான் 27 வயதில் கன்னடம் படித்தேன். 38 வயதில் இந்தி படித்து கொண்டிருக்கிறேன். அடுத்து தெலுங்கு கற்றுக்கொள்ள உள்ளேன். ஒரு மொழி கற்றுக் கொள்வதால் என் தாய் மொழி குறைந்து விடும் என்பதை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். மற்ற மாநில குழந்தைகள் கற்றுக் கொண்டு, தமிழ் மொழி சிறப்பானது என சொல்ல வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டம் கபட நாடகமாக இருக்கலாம். ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பாஜவின் ஆதரவு இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post எம்பி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயம்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.