எம்பி தொகுதி மறுசீரமைப்புக்கு துரை வைகோ கண்டனம்

5 hours ago
ARTICLE AD BOX

சென்னை: மதிமுக முதன்மை பொதுச் செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி கூறியதைப் போல நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், அது தென் மாநிலங்களுக்குப் பாதகமாக இருக்கும். 2000ஆவது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின் படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவே தான், அந்த ஆண்டிற்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும். ஒன்றிய அரசு, நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையில் 8 தொகுதிகள் குறைந்துவிடும் பேராபத்து இருக்கிறது என்று தமிழக முதல்வர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

மேலும் இதுகுறித்து முடிவு எடுக்க மார்ச் 5ம்தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் கூட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. நாடாளுமன்ற தொகுதி குறைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் தண்டனையா?. ஒன்றிய பாஜ அரசு, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பதை கருவியாக கொண்டு கூட்டாட்சித் தத்துவத்திற்கு முடிவுரை எழுதவும், மாநிலங்களின் உரிமை குரலை நசுக்கவும் முயற்சி செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எம்பி தொகுதி மறுசீரமைப்புக்கு துரை வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article