சமீப காலமாக சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பதை பார்த்து வருகிறோம். இதற்கு சான்றாக ஹைதராபாத்தில் மற்றொரு பெரிய சைபர் மோசடி நடந்துள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் போல நடித்து ஒரு நபர், அந்நிறுவனத்தின் அக்கவுண்டிங் ஆபிசருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். புதிய ப்ராஜெக்ட் ஒன்றுக்காக முன்பணமாக ரூ. 1.95 கோடியை அனுப்பும்படி கேட்டுள்ளார்.
உடனே அந்த அக்கவுண்டிங் ஆபீசரும் பணத்தை மாற்றியுள்ளார். அப்போது வங்கியிலிருந்து உண்மையான மேனேஜிங் டைரக்டருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அப்போதுதான் இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. நிறுவனத்தின் தரப்பில் உடனடியாக சைபர் கிரைம் செல்லுக்கு புகார் அளிக்கப்பட்டது. அப்போது விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் முழு தொகையையும் வெற்றிகரமாக மீட்டெடுத்தனர்.

மோசடி எப்படி நடந்தது?: நிறுவனத்தின் அக்கவுண்டிங் அதிகாரிக்கு, அந்நிறுவனத்தின் MD போல காட்டிக் கொண்ட ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தது. அந்த மெசேஜ்-இல், "புதிய ப்ராஜெக்ட்டிற்காகக முன்பணமாக ரூ.1.95 கோடியை அனுப்பும் படி கூறப்பட்டிருந்தது". மெசேஜை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் உண்மையானது போல தோன்றியதால் அக்கவுண்டிங் அதிகாரிக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை.
அவர் உடனடியாக பணத்தை மாற்றியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு உண்மையான எம்டிக்கு வங்கியின் மூலம் அறிவிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டது. அப்போதுதான் இந்த மோசடி பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. மோசடியை உணர்ந்த எம்டி உடனடியாக அக்கவுண்டிங் ஆபிஸரை தொடர்பு கொண்டார். அக்கவுண்டிங் ஆபிஸரும் வாட்ஸ்அப் மெசேஜை காட்டியுள்ளார்.
அத்தகைய செய்தியை தான் அனுப்பவில்லை என மறுத்து.. பணம் மோசடியாக பெறப்பட்டுவிட்டது என்பதை எம்டி உறுதிப்படுத்தினார். பின்பு உடனடியாக செயல்பட்டு இந்த வழக்கை தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்தனர். தெலுங்கானா சைபர் கிரைம் அதிகாரிகள் விரைவாக பரிவர்த்தனையை கண்காணித்தனர். அதிர்ஷ்டவசமாக மோசடி செய்தவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் அதிகாரிகள் கணக்கை முடக்கி, முழு தொகையையும் மீட்டெடுத்தனர்.
மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?: எந்தவித சரிபார்ப்பு செயல்முறையும் இல்லாமல் வாட்ஸ்அப், மெயில் அல்லது மொபைல் மூலம் வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் பெரிய தொகையை அனுப்பாதீர்கள்.
அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டும் பயன்படுத்தவும். மோசடிகளை உடனடியாக புகார் அளிக்க 1930 என்ற சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை அழைக்கலாம். மக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர்களை ஏமாற்றுவதற்கு புது யுக்திகளையும் மோசடிக்காரர்களும் கண்டுபிடிக்க தொடங்கிவிட்டனர்.
விழிப்புடன் செயல்படுவதைத் தவிர வேறு இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேறு எந்த வழியும் இல்லை. எனவே இது போன்ற சம்பவங்கள் குறித்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.