ARTICLE AD BOX
என்னது நெப்போலியனா?.. வேண்டாமே சார்.. தயங்கிய ரஜினிகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். 74 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக அவர் இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். கண்டிப்பாக கூலியும், ஜெயிலர் 2வும் ரஜினியின் கரியரில் மெகா ஹிட் படங்களாக அமையும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த் பற்றி ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. இருந்தாலும் சமூக அக்கறையுள்ள கதையம்சம் கொண்ட படத்தில் நடித்ததால் அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தார்கள். முக்கியமாக போலி என்கவுன்ட்டர் குறித்த் ரஜினிகாந்த் பேசியிருப்பதால் அந்த விஷயம் இன்னும் பல லட்சம் பேரிடம் மிக எளிதாக சென்று சேர்ந்துவிடும்; அதுகுறித்த விழிப்புணர்வும், கேள்வி கேட்கும் உணர்வும் எழும் என்றும் ஒருதரப்பினர் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தை முடித்த ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் அமீர் கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க; அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. முதன்முறையாக லோகேஷுடன் ரஜினி சேர்ந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
ஜெயிலர் 2வில் ரஜினி: கூலி படத்தை முடித்துவிட்டு கொஞ்சம் ரஜினி ரெஸ்ட் எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூலியை முடித்த கையோடு ஜெயிலர் 2வின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு ஒரு ரெஸ்ட்டை போடலாம் என்று அவர் பிளானில் இருந்ததாக தெரிகிறது. அதன்படி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. சில நாட்கள் அந்த ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் அதிரிபுதிரி ஹிட்டடித்திருந்தது. இதன் காரணமாக இரண்டாவது பாகத்தின் மீது எதிர்பார்ப்பு இருப்பதால் அதனை பூர்த்தி செய்ய நெல்சனும் கடுமையாக உழைத்துவருகிறாராம்.
ஆச்சரியத்தில் திரையுலகம்: ரஜினிகாந்த்துக்கு இப்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் இப்படி தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறாரே அவருக்கு எங்கிருந்துதான் இப்படிப்பட்ட எனர்ஜி வருகிறதோ என்று ரசிகர்களும், திரையுலகினரும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த எனர்ஜிக்கு காரணமே இப்போதும் அவர் தான் நடிக்கும் ஒரு படத்தை முதல் படம் போல் நினைத்து அணுகுகிறார். அதனால்தான் அவரால் இவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் எளிமையோடும், சுறுசுறுப்போடும் இருக்க முடிகிறது என்று கூறுகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் ரஜினி குறித்து நெப்போலியன் அளித்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

நெப்போலியனின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "எஜமான் பட சமயத்தில் எல்லாம் நான் வளர்ந்துவரும் நடிகராக இருந்தேன். அந்தப் படத்தில் என்னை வில்லனாக்க இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் முடிவு செய்தார். ஆனால் ரஜினியோ அவரிடம், 'நெப்போலியன் சின்ன வயதா இருக்கிறாரே. இந்தப் பையனை வில்லனாக போட்டால் சரியாக வருமா?.. மெச்சூர்டா இருக்கக்கூடிய ராதா ரவியை வில்லனாக போடலாம். அப்படி இல்லையென்றால் கன்னட நடிகர் பிரபாகரை வில்லனாக போடலாமே என்று சொல்லியிருக்கிறார்.
மறுத்துவிட்ட உதயகுமார்: ஆனால் இயக்குநர் உதயகுமாரோ, 'எம்ஜிஆரைவிடவும் நம்பியார் இளைய வயதுக்காரர்தான். ஆனால் எம்ஜிஆருக்கு நம்பியார் வில்லனாக, அப்பாவாக, மாமனராக நடித்திருக்கிறார். அதே மாதிரிதான் நெப்போலியன் உங்களைவிட சின்ன வயதாக இருந்தாலும் அவர் உங்கள் வயதுக்கு ஏற்ற மாதிரி கதையில் தோன்றும். அதனால் நன்றாக இருக்கும். அவரையே கமிட் செய்யலாம்' என சொல்லியிருக்கிறார். அதேபோல் படத்தில்கூட உன்னைவிட ஒரு வயது நான் மூத்தவன் என்று வசனமும் வரும்.
ரஜினியின் பாராட்டு: ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அப்படி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏவிஎம் பேனர் வேறு. அது எவ்வளவு பெரிய பேனர். படத்தில் ரஜினிதான் கடைசியாக டப்பிங் பேசினார். பேசி முடித்தவுடன் எனக்கு ஃபோன் செய்தார். அப்போது அவர் என்னிடம், 'நெப்போலியன் ரொம்ப பிரமாதமாக நடித்திருக்கிறீர்கள். நான்கூட நீங்கள் சரியாக வருவீர்களா என்று ஆரம்பத்தில் யோசித்தேன். ஆனால் உங்கள் கதாபாத்திரமும், நடிப்பும் மிக அருமையாக இருந்தது. உங்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்று கூறினார். உடனே நான் சார் அது நீங்கள் கொடுத்த வாய்ப்புதானே சார்' என்று சொன்னேன்" என்றார்.

எஜமான் திரைப்படம்: எஜமான் திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியானது. ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருந்த அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேசமயம் விஜயகாந்த்தை வைத்து உதயகுமார் இயக்கிய சின்ன கவுண்டர் படத்தை பார்த்து பிடித்துப்போய், உதயகுமாரை அழைத்து தனக்கும் அப்படி ஒரு கதை செய்யுங்கள் என்று ரஜினி கேட்டுக்கொண்டதால்தான் இந்த எஜமான் படம் உருவானதாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இளையராஜா இசையமைப்பில் ஆர்.வி.உதயகுமார் எழுதியிருந்த, 'எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ என்ற பாடல் கடுமையான விமர்சனத்தை சந்தித்ததும் நினைவுகூரத்தக்கது.
சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா?.. அந்த நடிகைக்கு என்ன தொடர்பு.. சிபிஐ சொல்வது என்ன?
நெப்போலியனின் கரியர்: முன்னதாக நெப்போலியன் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். தன்னுடைய முதல் படத்திலேயே அவர் வயதான கெட்டப்பை போட்டு அசத்தினார். அதனைத் தொடர்ந்து ஹீரோ, வில்லன் என எந்த ரோலாக இருந்தாலும் முழுதாக தன்னை அர்ப்பணித்து நடித்து சிறந்த நடிகர் என்கிற பெயரை பெற்றார். நடிப்பு மட்டுமின்றி அரசியலுக்கும் சென்ற அவர் மத்திய இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இப்போது சினிமா, அரசியல் என இரண்டையும் விட்டு விலகிவிட்டார்.
மனைவியுடன் விவாகரத்து.. மன அழுத்தம்.. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் மது.. அமீர் கான் வாழ்வில் இப்படியா?
மகன் திருமணம்: தன்னுடைய மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே செட்டில் ஆன அவர்; கடந்த வருடம்தான் அக்ஷயா என்கிற பெண்ணை மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணம் ஜப்பானில் நடைபெற்றது. கோலிவுட்டிலிருந்து மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். ரஜினிகாந்த்துக்கும் நெப்போலியன் பத்திரிகை வைத்தார். இருப்பினும் திருமணத்துக்கு தன்னால் செல்ல முடியாததால் தொலைபேசி மூலம் மணமக்களுக்கு அவர் ரஜினி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.