ARTICLE AD BOX
தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தன்னை கன்னத்தில் பல முறை அறைந்ததாகவும், உணவு வழங்க மறுத்ததாகவும், வெள்ளை காகிதத்தில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், ரூ.12 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில், பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின், கஸ்டடியில் இருந்த நடிகை ரன்யா ராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், கண்களுக்கு கீழே கருமையான திட்டுகளுடன், மன அழுத்தத்தில் அவர் இருப்பதுபோல தெரிந்தது.
இந்நிலையில், டி.ஆர்.ஐ., கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு, சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் கைப்பட எழுதிய கடிதம்: நான் கைது செய்யப்பட்டது முதல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, டி.ஆர்.ஐ., அதிகாரிகளால் உடல் ரீதியாக தாக்கப்பட்டேன். என்னை, 10 - -15 முறை கன்னத்தில் அவர்கள் அறைந்தனர்.
அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். பல முறை தாக்கப்பட்ட போதும், அவர்கள் தயாரித்த அறிக்கைகளில் கையெழுத்திட மறுத்து விட்டேன். மிகப்பெரிய மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்பட்டேன். இந்த வழக்கில் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு வேண்டுமென்றே உணவு தரப்படவில்லை; துாங்கவும் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரன்யா ராவின் தந்தையும், டி.ஜி.பி.,யுமான ராமச்சந்திர ராவ் விசாரணையில் உள்ளார். முழு விசாரணையும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.