ARTICLE AD BOX
சென்னை: இந்திய அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் எனப் பெயர் பெற்றிருக்கும் வருண் சக்கரவர்த்தி, தனக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட விருப்பம் இருந்தாலும் அது முடியாது என கோபிநாத்துக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
தற்போது 33 வயதாகும் வருண் சக்கரவர்த்தி இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பின்னராக மாறி இருக்கிறார். முதலில் டி20 அணியில் மட்டுமே முதன்மை ஸ்பின்னராக மாறி இருந்த அவர், அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டார்.

ஒருநாள் அணியில் அதிக அனுபவம் இல்லாத நிலையிலும் அவர் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று முக்கிய போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை சாய்த்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டிகளிலும் அணிக்குத் தேவையான அளவில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவரை அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது பற்றி வருண் சக்கரவர்த்தி அந்த பேட்டியில் பேசினார். அப்போது, "எனக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ஆர்வம் உள்ளது. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கு எனது பவுலிங் முறை ஒத்து வராது. நான் சற்று மிதவேகத்தில் பந்து வீசுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 20, 30 ஓவர்கள் வீச வேண்டும். எனது பவுலிங் முறையில் அத்தனை ஓவர்களை வீச முடியாது."
"நான் வேகமாக பந்து வீசுவதால் என்னால் 10 அல்லது 15 ஓவர்கள் தான் பந்து வீச முடியும். அது டெஸ்ட் போட்டிகளுக்கு சரிவராது. அதனால் இப்போதைக்கு நான் 20 ஓவர் போட்டி மற்றும் 50 ஓவர் போட்டிகளில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்" என்றார் வருண் சக்கரவர்த்தி.
இந்திய அணி நிர்வாகமும் அவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்காது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில், மிஸ்டரி ஸ்பின்னர் எனப் பெயர் எடுத்திருக்கும் வருண் சக்கரவர்த்தியின் பலமே அவர் எந்த முறையில் பந்து வீசுகிறார் என்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தெரியாமல் இருப்பதுதான்.
குறைந்த ஓவர் போட்டிகளில் பந்து வீசும் போது அவரது நுணுக்கத்தை விரைவில் பேட்ஸ்மேன்களால் அறிய முடியாது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது அவர் அதிக ஓவர்களை வீச வேண்டி வரும். அப்போது பேட்ஸ்மேன்கள் அவரது நுணுக்கத்தை கண்டறிந்து அதற்கு எதிராக ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது.
என்னை நாடு திரும்ப கூடாது என்று மிரட்டினார்கள்.. தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி புகார்
அப்படி நடந்தால் அதற்குப் பின்னர் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் மற்ற பேட்ஸ்மேன்களும் எளிதாக ரன் குவிக்கத் துவங்கி விடுவார்கள். எனவே. அவரை டி20 போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வது மட்டுமே இந்திய அணிக்கு அதிக பலனை கொடுக்கும்.