ARTICLE AD BOX
பிரான்ஸ் நாட்டில் கான்டோர்ஸெட் என்ற பணக்காரபிரபு ஒருவர் வாழ்ந்து வந்தார். எத்தகைய தவறு செய்திருந்தாலும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாது என்று கூறியதனால் கோபமுற்ற அரசாங்கம் அவருக்கு மரணதண்டனை விதித்து அவருடைய தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
அதற்கிடையில் தனிமையான ஒரு சிறிய அறையில் ஒளிந்துகொண்டு அவர் காலம் தள்ளிவந்தார்.
படிப்பதற்கு கூட அவருக்குப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் மனித இனத்திற்கு மிக நல்ல காலம் வரத்தான் போகிறது என்ற கருத்தை வலியுறுத்தி நம்பிக்கையை வளர்க்கும் புத்தகத்தை முடித்தார். அது மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ள புத்தகமாக இன்னும் கருதப்பட்டு வருகிறது.
அவர் ஒளிந்து கொண்டிருக்கும் இடம் அரசாங்கத்திற்கு தெரிந்துவிடுகிறது சாவில் இருந்து தப்ப அவர் மிக தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு ஓடிச்சென்று அங்கிருந்து ஒரு விடுதியில் தங்கினார்.
யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நம்பிய அவர் களைப்பின் காரணமாக கட்டிலில் படுத்துக்கொண்டே சில வினாடிகளிலேயே தூங்க ஆரம்பித்தார்.
சட்டத்தின் பெயரால் கைது செய்யப்பட்ட அவரை அந்தக் கிராமத்தில் உள்ள சிறையில் கொண்டு சென்று அடைத்து வைத்தார்கள். தலை துண்டிக்கப்படும் கோரத்தில் இருந்து தப்புவதற்காக அவர் எப்போதும் தன்னுடன் விஷத்தை வைத்துக் கொண்டிருந்தார். விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பின் வருமாறு எழுதினார்.
'அறிவானது உலகம் எங்கும் பரவும்போது, நாடுகளிலும் சமூகத்திலும் இருந்துவரும் அடிமைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். விவேகத்தின் அடிப்படையில் தோன்றும் நியாயமான காரணங்கள் தவிர மக்கள் வேறு எஜமானர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
ஹக்ஸ் என்ற அறிஞர் சாகும் நிலையில் படுத்துக் கிடந்தார். அவரைச் சுற்றி சொந்தக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். அங்கு இருந்தவர்களிடம் அவர் சொன்ன கடைசி வார்த்தைகள்-
" விளக்கை நன்கு எரிய விடுங்கள். நான் இருட்டில் என் புதிய வீட்டுக்குப் போவதை விரும்பவில்லை."
தாங்கள் நம்பிய கொள்கைகளுக்காக கொஞ்சமும் பயப்படாமல் உறுதியுடன் நின்று, உயிரையே சந்தோஷமாக தியாகம் செய்தவர்கள் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.
பேலிஸ்ஸி என்பவர் புதிய மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அரசன் ஹென்றி, பேலிஸ்ஸியிடம் புதிய மதத்தை பற்றி பிரச்சாரம் செய்யாமல், அந்த மதத்தை விட்டுவிட்டால் அவரை மன்னித்து உயிருடன் இருக்க விடுவதாகவும் கூறினார்.
பேலிஸ்ஸி அதற்கு உடன்படவில்லை. பேலிஸ்ஸி சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். பேலிஸ்ஸியையும், அவனுடன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு பெண்களையும் கொன்று விடுவதாக அரசன் பயமுறுத்தினான்.
பேலிஸ்ஸி அரசனைப் பார்த்து, "நீங்கள் என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவதாக பலமுறை கூறிவிட்டீர்கள். உண்மையிலேயே அரசனான உங்களைப் பார்த்தால் நான் மிகவும் பரிதாபப்படுகிரேன் கொஞ்சம்கூடப் பயப்படாமல் கூறினார்.
இப்படிப் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர் களுக்கு சொத்தும், சுகமும் கிடைக்காதிருக்கலாம். ஆனால் தான் சாகும் நிலையில் கூட, எதற்கும் அஞ்சாமல் மனித இனத்தை சிந்திக்க வைத்து, உலக உருண்டையை அமைதிப்பூக்களால் அலங்கரித்திருக்கிறார்கள்.
அந்த மகா அறிஞர்களின் பெயர்களைத்தான் மனித இனம் என்றும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கும்.