ARTICLE AD BOX
நாம் நம்மைப் பற்றி எப்போதும் உயர்வாகவே கருதிச் செயல்பட வேண்டும். மற்றவரை காணுகின்ற போதும் சரி, பழகுகின்ற போதும் சரி நம்மில் உயர்ந்தவராகக் கருதி பழகிட உங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அடிப்படை நமது எண்ணங்கள் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
எண்ணங்கள் தூய்மை இல்லாது போனால் நாம் எதிர் நோக்குவது அனைத்துமே எதிர்மறையாகத்தான் தெரியும்.
பழுதான எண்ணங்களை உள்ளத்தில் அமர்ந்து திரிந்தால் நீங்கள் உருக்குலைவது உறுதி. உயிர்க் கொல்லி நோயைவிட இந்த நஞ்சான எண்ணங்கள் கொடியது.
நிதானம் இல்லாத சிந்தனை அவசரத்தில் எடுத்த முடிவுகள் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்ச்செயல்களை செய்ய தயாராகுதல் போன்றவற்றால் நமது எண்ணங்கள் தடுமாறுகின்றன.
விளைவு உடலும் கெட்டுப்போய் பாதை தவறியதால் பழிக்கும் ஆளாக்கப்படுகின்றோம். எண்ணங்களை வலிமையாக்கி தூய்மையாக்கிக் கொண்டால் நீங்கள் மட்டுமல்ல, இந்த மண்ணுலகத்தையே மகிழ்வாக வைத்துக் காட்ட முடியும். ஒலி, ஒளியைவிட விரைவாக சென்று தாக்குகின்ற சக்தி உயிருள்ளவும் உயிர் அற்றதும் உள்ள அனைத்து பிற நிலைகளிலேயும் நமது எண்ணத்தைச் செலுத்தி இயங்க வைக்க இயலும் என்று இன்றைய அமெரிக்க அறிவியல் அறிவித்திருக்கிறது.
விஞ்ஞான ஆய்வுக்கலையில் இன்றைக்கு அமெரிக்கர்கள் பெரிதும் ஈடுபட்டு உண்மைகளை வெளிக் கொணர்வதற்கு கருப்பொருளாக "மனித எண்ணங்களை" எடுத்துக்கொள்கின்றார்கள்.
எண்ணத்தை மலிவாக எடை போடாதீர்கள். அது ஒரு தீப்பொரி.
மேலைநாட்டு மருத்துவத்துறையில் இன்றைக்கு ஓர் அணுகுமுறையைக் கையாண்டு மருந்துவில்லைகளால் குணப்படுத்த முடியாத நோய்களான புற்று நோய் அல்சர் இரத்த அழுத்தம் போன்றவற்றை உளச்சிகிச்சையால் குணப்படுத்தி வெற்றி கண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
உதாரணத்திற்கு உங்களுக்கு தலைவலி வந்துவிட்டது. உடனடியாக மாத்திரை வாங்க நினைக்காமல் தலைவலிக்கவில்லை. நன்றாக இருக்கிறேன். எனத் திரும்பத் திரும்ப சொல்லிப்பாருங்கள். ஒருமுகப் படுத்தப்பட்ட எண்ணத்தை நினைவில் பதிய வைத்து சொல்லிப் பாருங்கள். தலைவலி தானாகப் பறந்தோடிப் போகும். வேடிக்கையல்ல உளவியல் ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை.
எண்ணங்களின் ஆட்சியாலேதான் இன்றைக்கும் சர்க்கஸ் கூடாரத்தில் கொடிய விலங்கினங்கள் கூட மனிதனின் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றன. சிங்கத்திடம் கடுமையாக கர்ஜித்து சத்தம் போட்டால், கிழே படுத்துவிடும். நாயை அன்பாகக் கூப்பிட்டு தடவிக் கொடுத்தால் "வாலை" ஆட்டி நம்மீது தாவிக்கொஞ்சும்.
லட்சோப லட்சக்கணக்கில் தெருக்கோடியிலும் விதிகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் அநாதைகளாகக் காணப்பட்ட சிறுவர்களை தெய்வமாகக் கருதித் தனிமரமாக நின்று இன்றைக்கு உலகம் முழுவதும் காப்பகங்களை நிறுவிய அன்னை தெரேசாவின் எண்ணம் ஆக்கத்தை தானே இன்று எல்லோரும் ஆராதிக்கின்றார்கள்.
ஆகவே, எண்ணங்களை அழகாக்குங்கள்; அற்புத வாழ்வு தேடிவரும்.