ARTICLE AD BOX
செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துகளுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகப்பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் எனப்படும் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் சக்திவாய்ந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் அமெரிக்கா மற்றும் பிற கப்பல்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக இடைவிடாத கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அமெரிக்கக் கொடியுடன் கூடிய கப்பம் சூயஸ் கால்வாய், செங்கடல் அல்லது ஏடன் வளைகுடா வழியாக பாதுகாப்பாக பயணித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பு செங்கடல் வழியாகச் சென்ற கடைசி அமெரிக்க போர்க்கப்பல் ஹவுத்திகளால் தாக்கப்பட்டது. இந்த இடைவிடாத தாக்குதல்கள் அமெரிக்காவிற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பல பில்லியன் டாலர்களை இழப்பினை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், அப்பாவி உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
ஹவுதிக்களுக்கான நேரம் முடிந்துவிட்டது எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஹவுதிக்களின் தாக்குதல்கள் இன்றிலிருந்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், அப்படியில்லை எனில் ஹவுதிக்கள் இதுவரை கண்டிராத நரக மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளார். அதேசமயத்தில் ஈரானுக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், ஹவுதி பயங்கரவாதிகளுக்கான தனது ஆதரவை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அமெரிக்காவை அச்சுறுத்தினால், அமெரிக்கா உங்களை முழுமையாக பொறுப்பேற்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக ஆணையிட அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடத்தப்பட்டுள்ளது. ஏமனின் தலைநகர் சனா, சாடா, அல்பேடா மற்றும் ரடா போன்ற இடங்களில் நடத்தப்பட்டத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். 101 நபர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல்-அஸ்பாஹி தெரிவித்துள்ளார். ஹவுதிக்களின் அரசியல் பணியகம் இந்த தாக்குதலைப் போர்க்குற்றம் எனத் தெரிவித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு ஏமனின் தலைநகரைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2023 முதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது உலகளாவிய வர்த்தகத்தை சீர் குலைத்தது. 2023 முதல் ஹவுதிக்கள் அமெரிக்க போர்க்கப்பல்களை 174 முறையும், வணிகக் கப்பல்களை 145 முறையும் தாக்கியுள்ளதாக பெண்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.