ARTICLE AD BOX
ஊதிய உயர்வு இருந்தும் மகிழ்ச்சி இல்லை.. விரக்தியில் இருக்கும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள்!
முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடிதங்களை செவ்வாய்க்கிழமை அன்று அனுப்பியுள்ளது. ஒவ்வொரு ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த செயல் திறன் கொண்ட சில ஊழியர்களுக்கு இரட்டை இலக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஊதிய உயர்வு முக்கியமாக 3 விஷயங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அவை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணி புரிதல், பாராட்டத்தக்க வகையில் தங்கள் செயல் திறனை வெளிப்படுத்துதல் மற்றும் சிறந்த செயல் திறனை வழங்குதல். இன்ஃபோசிஸ் நிறுவனம் மேலே கூறப்பட்டுள்ள 3 பிரிவுகளின் கீழ் தான் இந்த ஊதிய உயர்வை வழங்கியுள்ளது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையும், பாராட்டுக்குரிய செயல் திறனை வெளிப்படுத்திய ஊழியர்களுக்கு 7 சதவீதம் முதல் 10 சதவீத ஊதிய உயர்வும், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய ஊழியர்களுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

வேலையில் இன்னும் இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்படும் ஊழியர்களுக்கு எந்தவித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சம்பள உயர்வுகள் லெவல் 5 மற்றும் லெவல் 6-இல் பணிபுரியக்கூடிய டீம் லீடர்கள், மேனேஜர்கள் மற்றும் வைஸ் பிரசிடெண்ட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஊதிய உயர்வுகள் ஜாப் லெவல் 5-இல் இருப்பவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதலும், ஜாப் லெவல் 6-இல் இருப்பவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஊதிய உயர்வுகள்: 2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அப்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு விகிதத்தை விட, இந்த முறை 5 முதல் 10 சதவீதம் வரை குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த வாரம் பர்பாமன்ஸ் போனஸ் என்று சொல்லப்படும் வேரியபிள் பே-வை அறிவித்தது. இதுவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இதுவும் குறைவான விகிதத்தில் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைத் தலைமையிடமாக கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சுமார் 3,23,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த சம்பள உயர்வு 2023-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் வரையிலான காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
என்னதான் ஊதிய உயர்வு வழங்கப்பட்டாலும், தாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், இன்ஃபோசிஸ் எதிர்பார்த்ததை விட அதிகமான வருவாயை பதிவு செய்தது. முந்தைய ஆண்டை விட நிகர லாபத்தில் 11.4 சதவீதம் அதிகரித்து $800 மில்லியனாகவும், வருவாய் 7.6 சதவீதம் உயர்ந்து $4.9 பில்லியனாகவும் உள்ளது.