ARTICLE AD BOX
சின்ன திரை நடிகை அஸ்வதி தனக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்ணை வெளிக்கொணர்ந்ததை விடியோவாகப் பதிவிட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், தமிழில் மோதலும் காதலும், மலர் உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் சின்ன திரையிலும் நடித்துவருகின்றனர். பிரைம் டைம் எனப்படும் முக்கிய நேரங்களில் அந்தத் தொடர்கள் ஒளிபரப்பாவதால், அந்தத் தொடருக்கும் அதில் நடிக்கும் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
ஒருசில தொடர்கள் நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பானாலும், அதில் நடிக்கும் நடிகைகளின் வசீகரம், நடிப்புத் திறமை மற்றும் கதையம்சத்தால் அவை மக்களிடம் வரவேற்பைப் பெறுகின்றன.
அந்தவகையில் கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஸ்வதி தமிழ் சின்ன திரை தொடர்களில் நடித்து மக்களிடம் புகழ் பெற்றுள்ளார்.

நேரமின்றி உழைக்கும் அஸ்வதி
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து சின்ன திரையில் நுழைந்த அஸ்வதி, மனசினக்கர என்ற தொடரில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் மோதலும் காதலும் என்ற தொடரில் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இத்தொடர், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தத் தொடர் முடியும் தருவாயில், சன் தொலைக்காட்சியின் மலர் தொடரில் அஸ்வதிக்கு வாய்ப்பு கிடைத்தது. அத்தொடரில் நடிகை பிரீத்தி சர்மாவுக்கு பதில் நாயகியாக நடித்துவருகிறார்.
இதற்கிடையே மீண்டும் மலையாளத்தில் அபூர்வ ராகங்கள் என்ற தொடரிலும் நடித்துவருகிறார். இதனால் இரு தொடர்களின் படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் அடிக்கடி பயணத்து வருகிறார்.

பயணம், படப்பிடிப்பு என ஓடிக்கொண்டிருந்தாலும் இதற்கிடையே புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில், தனக்குள் இருக்கும் தமிழ்ப் பெண் அடிக்கடி வெளியே வருவதாக ஒரு விடியோவை தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில், வைக்கோல் டிராக்டருடன் விளையாடுவது, வயல்வெளிகளில் நடைபோடுவது, புளியமரத்தின் கிளைகளைப் பிடித்து ஆடி, அதன் புளியங்காய்களைப் பறித்து சுவைப்பது என தன்னை ஒரு தமிழ்ப் பெண்ணாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த விடியோவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நினைத்தாலே இனிக்கும் தொடரில் சின்ன மருமகள் நாயகி!