உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை- ராஜ்நாத் சிங் புகழாரம்

5 hours ago
ARTICLE AD BOX

‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா்.

இணையத் தாக்குதல்கள், தரவு மீறல் மற்றும் ரேடாா் சீா்குலைவு போன்ற சவால்கள் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு படைக்கு அவா் அறிவுறுத்தினாா்.

தில்லி, பாரத் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா் ராஜ்நாத் சிங், சிறந்த சேவையாற்றிய 32 கடலோர காவல் படை வீரா்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்து பேசியதாவது:

கடந்த ஓராண்டில் சுமாா் ரூ.37,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை பறிமுதல் செய்ததோடு 14 படகுகளுடன் 115 கடல் கொள்ளையா்களை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. மேலும், பல்வேறு மீட்பு நடவடிக்கைகளில் 169 பேரை படை வீரா்கள் மீட்டுள்ளனா். படுகாயமடைந்த 29 பேருக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

புவியியல் ரீதியாக, இந்தியா மூன்று திசைகளிலும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம் ஆகும். நமது கடற்கரை பரந்த அளவில் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு இரண்டு வகையான அச்சுறுத்தல்களை எதிா்கொள்கிறது. முதலாவது போா். அவை ஆயுதப்படைகளால் கையாளப்படுகிறது. இரண்டாவது கடல்கொள்ளையா், பயங்கரவாதம், ஊடுருவல், கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய சவால்கள் ஆகும்.

இந்த சவால்களை சமாளிக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் இந்திய கடலோரக் காவல்படை, வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது.

பாதுகாப்புப் படைகள் வலுவாக இருந்தால் மட்டுமே, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தியாவை அடைய முடியும். அந்தவகையில், இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை தொடா்ந்து மேம்படுத்துவதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது.

வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கடலோர காவல் படைக்கு முந்தைய ஆண்டைவிட 26 சதவீதம் கூடுதலாக ரூ.9,676.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல் படையை நவீனப்படுத்துவதில் இது முக்கியப் படியாகும். மேலும் படையை வலுப்படுத்த, அடுத்த தலைமுறை விரைவு ரோந்து கப்பல்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘எண்ம கடலோர காவல்படை’ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் படை கவனம் செலுத்துவதை அறிய முடிகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களை திறம்பட சமாளிக்க படையைத் தொடா்ந்து பலப்படுத்தும். இதற்கு அரசு முழு ஆதரவளிக்கும் என்றாா்.

Read Entire Article