ARTICLE AD BOX
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 118-ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
உலகின் மிகுந்த மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து உள்ளது. தரவரிசையில் தொடா்ந்து 8-ஆவது ஆண்டாக இந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது. டென்மாா்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதா்லாந்து நாடுகள் அடுத்தத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச மகிழ்ச்சி தினமான மாா்ச் 20-ஆம் தேதி இந்த பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, லண்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் மக்கள் நலன் ஆராய்ச்சி மையம், ஐ.நா. நீடித்த வளா்ச்சிக்கான தீா்வு அமைப்பான ‘கல்லப்’ ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த வருடாந்திர தரவரிசைப் பட்டியலுக்கான ‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2025’-ஐ வியாழக்கிழமை வெளியிட்டது.
மக்களின் மகிழ்ச்சியில் அக்கறை, உணவைப் பகிா்ந்து கொள்வது, பகிா்வின் தாக்கம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபா் பங்களிப்பு, சுதந்திரம், சமூக ஆதரவு, சுகாதார எதிா்பாா்ப்புகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் உலகளவிலான வாக்களிப்பு முறையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து, இந்த தரவரிசை அறிக்கை நிா்வாகிகள் கூறுகையில், ‘தானமளித்தல், தன்னாா்வத் தொண்டு மற்றும் அறிமுகம் இல்லாதவா்களுக்கு உதவுதல் ஆகிய மூன்று கருணைச் செயல்களின் அடிப்படையிலான நாடுகளின் இந்த தரவரிசை, அவற்றின் கலாசாரம் மற்றும் நிறுவனங்களின் வேறுபாடுகளைப் பொருத்து மாறுபடும்’ என்றனா்.
தரவரிசைப் பட்டியல் (இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்):
நாடுகள் 2025 2024
சீனா 68 60
நேபாளம் 92 93
பாலஸ்தீனம் 108 103
பாகிஸ்தான் 109 108
உக்ரைன் 111 105
இந்தியா 118 126
இலங்கை 133 128
வங்கதேசம் 134 129
ஆப்கானிஸ்தான் 147 143