ARTICLE AD BOX

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறன் ஆய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது சென்னை தரமணியில் அமைந்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும். ஆர். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார்.தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர் ஆவார். சிந்துவெளிப் பண்பாட்டுத் தொல்லியல் தரவுகளைச் சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்திய ஆட்சிப் பணியில் 1984ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும், இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப்பணியாற்றியவர். ஒடிசா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2018 இல் பணி ஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு ஒடிசா மாநில முன்னாள் முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தார். திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல் தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும், பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்…! appeared first on Rockfort Times.