ARTICLE AD BOX
மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. அதே சமயம் இதற்கு முன் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்று இருந்த இரண்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ஒருநாள் போட்டிகள் வடிவில் நடைபெறும் தொடர் எனும் நிலையில் இரண்டு உலகக் கோப்பை வென்ற அணிகளுக்கு இடம் அளிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி சில கிரிக்கெட் ரசிகர்களுக்கு உள்ளது. அதற்கு காரணம், 2023 உலகக் கோப்பை தொடர் தான். இதற்கு முன் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை தேர்வு செய்வது என்பது ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையின் படி அமைந்தது.
ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தேர்வு என்பது 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை ஒட்டி அமைந்தது. அந்தத் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தன. அந்த அணிகளில் லீக் சுற்றில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.
அதன்படி அந்த லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களை பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க தகுதி பெற்றன. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் அணி என்ற வகையில் முன்னதாகவே தகுதி பெற்று இருந்தது.
இதற்கு முன் உலகக் கோப்பை வென்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேறவில்லை. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிலைமை படுமோசமாக இருந்தது. 2023 உலகக் கோப்பை தொடருக்கே வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறவில்லை.
முதலில் ஒருநாள் போட்டி தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்தங்கி இருந்ததால் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. அதன் பின்னர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. அதிலும் தோல்வி அடைந்ததை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியால் 2023 உலகக் கோப்பையில் ஆட முடியவில்லை. அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இடம் பெற முடியாமல் போனது.
ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர்களின் முதல் இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணிதான். 1975 மற்றும் 1979 உலகக் கோப்பைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாயகரமான அணியாக இருந்தது. அப்போது மட்டுமே அந்த அணி ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சாம்பியன் டிராபி தொடருக்கு கூட முன்னேற முடியாத நிலையில் அந்த அணி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு தான் ஆபத்து.. ஆதாரத்துடன் எடுத்து கூறிய முகமது கெயிப்
அடுத்து 1996 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி இந்த முறை 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறவில்லை. 2023 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றின் முடிவில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது தான் இதற்கு காரணம். முதல் எட்டு இடங்களில் இடம் பிடித்த அணிகளுக்கு மட்டுமே சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு எனும் நிலையில் இலங்கை அணி, 2023 உலகக் கோப்பையில் ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்ந்தது. அதனால் வாய்ப்பையும் இழந்தது.