ARTICLE AD BOX
தற்போது வயது வித்தியாசம் இன்றி 16 வயது சிறுவர்கள் முதல் 70, 80 வயது முதியவர்கள் வரை பலரும் மதுவுக்கு அடிமையாகி இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். 20, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மது அருந்தாதவர்களை நல்லவர்களாகவும் கௌரவம் மிக்கவர்களாகவும் பார்த்த சமூகத்தின் கண்ணோட்டம் இன்று மாறியுள்ளது. மது அருந்தாத மனிதர்களை அப்பாவிகள் என்ற கண்ணோட்டத்தில் தான் நிறைய பேர் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அந்த அளவுக்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், என்ற பாகுபாடு இன்றி மதுப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது வேதனையான உண்மை.
மது அருந்துவது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். மெல்ல மெல்ல ஆரம்பித்த இந்த பழக்கம் அதைவிட முடியாத அளவிற்கு பெரிதாகி ஆரோக்கியத்தை படிப்படியாக குறைத்து அகால மரணத்திற்கு கூட வழி வகுக்கும். இதை அறிந்தே தான் மதுப்புட்டியை கையில் எடுக்கிறார்கள் என்பதும் நிஜம்.
உடல், மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள்;
கல்லீரல் பாதிப்பு;
தொடர்ந்து ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. கல்லீரலில் கொழுப்பு குவிந்து கல்லீரல் நோய்க்கு வழி வகுக்கிறது. அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் வீக்கம் எனப்படும் ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ், வடுக்கள் (ஃபைப்ரோசிஸ்) போன்றவை ஏற்படலாம்.
இதய நோய்;
மிதமான மது அருந்துதல் கூட இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் பருமனும் அதிகரிக்கும் இவை இரண்டும் இருதய அமைப்பை கஷ்டப்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும். கூடுதலாக பக்கவாதமும் ஏற்படும் அபாயமும் உண்டாகும்.
புற்றுநோய்;
ஆல்கஹால் புற்றுநோயை உண்டாக்கும் மிக முக்கியமான காரணியாகும் இது வாய், தொண்டை, உணவுக் குழாய், கல்லீரல் மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மூளை பாதிப்பு;
நாள்பட்ட மது அருந்துதல் மூளையை பாதிக்கும். மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மூளை செயல்பாடு பாதிக்கப்படுவதால் அறிவாற்றல் திறனும் பாதிக்கும்.
பிற சிக்கல்கள்;
மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டும் போது, அது அதிகமான விபத்துகளை உண்டாக்கும். மது அருந்திய மனிதர்களின் சிந்தனை பாதிக்கப்படுவதால் குடும்ப வன்முறைகளும் அதிகரிக்கின்றன. இதனால் தம்பதிகளுக்கு இடையே மனத்தாங்கல் உண்டாகி, விவாகரத்துகள் பெருகுகின்றன. மதுப்பழக்கம் உள்ள பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனைகள் உண்டாகும்.
மரணம்;
நாள்பட்ட குடிப்பழக்கத்தின் காரணமாக உடலின் செல்களில் மீண்டும் உருவாக்கும் திறன் பாதிக்கப்படுவதால் நிம்மோனியா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி போன்ற கடுமையான நோய்களை ஏற்படும். இது மரணத்தை விளைவிக்கும்.
ஆரோக்கியமற்ற பழக்கம்;
கவலையை மறக்க, உடல் சோர்வைக் குறைக்க, மன அழுத்தத்தில் இருந்து விடுபட என்று மது அருந்த சொலலப்படும் காரணங்கள் என்னவாக இருந்தபோதும் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டியில் மது அருந்துவது, சோசியல் டிரிங்கிங் எனப்படும் கம்பெனி மீட்டிங்குகளில், திருமண விஷேசங்களில், வெளியூர் செல்லும் போதும், தனித்திருக்கும் போதும், நண்பர்கள் கூடுகையின் போதும் என்று என்ன காரணம் சொல்லப்பட்டாலும் மது குடிப்பது ஒரு ஆரோக்கியமற்ற பழக்கம்.
வீட்டு ஆண்கள் குடிப்பதை பெண்கள் பலரும் ஏற்றுக் கொண்டு, அதை ஏதோ டீ, காஃபி அருந்துவதைப் போல மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பார்க்க முடிந்தது. சில பெண்கள் தம் மகனோ, கணவரோ குடிப்பதை ஒரு சமூக அடையாளமாக, கவுரவமான விஷயமாகப் பார்க்கிறார்கள் என்பது அதிர்ச்சி தருகிறது.
மிதமான மருந்த மது அருந்தும் பழக்கம் கூட ஆயுட்காலத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நபரின் ஆரோக்கியத்தை படிப்படியாக மோசமாக்கி, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்தை உண்டாகும் மது அருந்தும் பழக்கம் தேவையா என மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.