ARTICLE AD BOX

அமெரிக்காவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான Eli Lilly, இந்தியாவில் தனது புதிய எடை குறைப்பு ஊசி மருந்தான *மௌஞ்சாரோ (Mounjaro)*வை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 1,000 டாலர் முதல் 1,200 டாலர் வரை விலை கொண்ட இந்த மருந்து, இந்தியாவில் அதற்கு 5-ம் பங்கு விலைக்கே கிடைக்கின்றது. 2.5 மில்லிகிராம் ஊசி ரூ.3,500-க்கும், 5 மில்லிகிராம் ஊசி ரூ.4,375-க்கும் விற்பனைக்கு வர உள்ளது. இது ஒரு வாரத்திற்கு ஒரு முறை மருத்துவர்களின் பரிந்துரையுடன் செலுத்த வேண்டிய ஊசி மருந்தாகும்.
மௌஞ்சாரோ மருந்தின் பரிசோதனைகள் முக்கிய முடிவுகளை வெளிக்கொணர்ந்துள்ளன. உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியுடன் இந்த மருந்தை எடுத்தபோது, 15 மில்லிகிராம் டோஸில் இருந்தவர்கள் சராசரியாக 21.8 கிலோ எடையை இழந்தனர், குறைந்தபட்சமாக 5 மில்லிகிராம் டோஸில் இருந்தவர்கள் 15.4 கிலோ எடையை இழந்ததாக கண்டறியப்பட்டது. இது உடல் பருமன், அதிக எடை, மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு எதிரான சிகிச்சையாக பயன்படுகிறது என Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்றவாறு விலையை குறைத்துள்ளதாகவும், எந்த இந்திய நிறுவனத்துடனும் கூட்டாண்மை இல்லாமல் தான் விநியோகிக்கப்படுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் அறிமுகப்படுத்திய ரைபெல்சஸ் மாத்திரை தற்போது உடல் பருமன் எதிர்ப்பு மருந்து சந்தையில் 65% பங்கைக் கொண்டுள்ளது. இந்த சந்தை, 2020ல் ரூ.137 கோடியாக இருந்த நிலையில், 2024ல் ரூ.533 கோடியாக வளர்ச்சி பெற்றுள்ளது. மௌஞ்சாரோ ஊசி மருந்திற்கு சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதில் குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை அடிக்கடி காணப்படும். இவை நீடிக்கும்போது மருத்துவர் ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.